Tuesday, 2 October 2018

5.மெயப்பொருள் நாயனார் புராண சூசனம்

சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர்
    திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை
நீதியனா ரூடன்பொருது தோற்ற மாற்றா
    னெடுஞ்சினமுங் கொடும்பகையு நிகழா வண்ண
மாதவர்போ லொருமுறைகொண்ட டணுகி வாளால்
    வன்னமபுரிந் திடமருண்டு வந்த தத்தன்
காதலுற நமர்தத்தா வென்று நோக்கிக்
    கடிதகல்வித் திறைவனடி கைகொண் டாரே.
சேதிநாட்டிலே திருக்கோவலூரிலே, மலையமானாட்டாருக்கு அரசரும், வேதாகமங்களின் உண்மையை அறிந்த வரும், சிவனடியார்களுடைய திருவேடத்தையே மெய்ப்பொருளெனச் சிந்தைசெய்பவருமாகிய மெய்ப்பொருணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய இராச்சியத்தைத் தருமநெறி தவறாமல் நடத்தியும், தம்மை எதிர்த்த பகைவர்களை ஜயங்கொண்டு, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்களைச் சிறப்பாக நடத்தியும், சிவபத்தர்கள் வந்தபொழுது மனமகிழ்ச்சியோடும் வேண்டிய திரவியங்களைப் பூர்த்தியாகக் கொடுத்தும் வந்தார்.
இப்படி நடக்கும் காலத்திலே, முத்திநாதன் என்கின்ற ஓரரசனானவன் அவரை வெல்லுதற்கு விரும்பி, யுத்தசந்நத்தனாகி, அவரோடு பொருது, யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சேனைகளைப் பலமுறை இழந்து, தோற்று அவமானப் பட்டுப்போனான், பின்பு அவன்யுத்தத்தினாலே அவரை ஜயிக்கமாட்டாதவனாகி, அவரிடத்திலே இருக்கின்ற அடியார் பக்தியை அறிந்து, விபூதி தரிக்கின்ற அவ்வடியார்வேடங் கொண்டு அவரைக் கபடத்தினால் வெல்ல நினைந்து, சரீர முழுவதிலும் விபூதி தரித்து, சடைகளைச் சேர்த்துக் கட்டி புத்தகக்கவளிபோலத் தோன்றுகின்ற ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கின்ற ஓர் கவளியை எடுத்துக்கொண்டு, திருக்கோவலூரிற் சென்று. மெய்ப்பொருணாயனாருடைய திருமாளிகைவாயிலை அடைந்தான். அப்பொழுது வாயிற்காவலாளர் அவனை அஞ்சலிசெய்து, "சுவாமீ! உள்ளே எழுந்தருளும்" என்று சொல்ல; அம்முத்திநாதன் உள்ளே போய், மற்றவாயில்களையும் அப்படியே கடந்து சென்று இறுதி வாயிலை அடைந்தபொழுது, அவ்வாயிற் காவலாளனாகிய தத்தனென்பவன் "இப்பொழுது இராசா நித்திரை செய்கின்றார். நீர் சமயமறிந்து, போகவேண்டும்" என்றான். அதைக்கேட்ட முத்திநாதன் "நான் அவருக்குச் சாஸ்திரோபதேசஞ் செய்யப்போன்கின்றபடியால், நீ என்னைத் தடுக்கலாகாது" என்று சொல்லி, உள்ளே புகுந்து, மெய்ப்பொருணாயனார் கட்டிலிலே நித்திரைசெய்ய அவர்மனைவியார் பக்கத்திலிருக்கக் கண்டும், சமீபத்திலே சென்றான்.
அப்பொழுது, மனைவியார் சீக்கிரம் எழுந்து, மெய்ப்பொருணாயனாரை எழுப்ப; அவர் விழித்தெழுந்து, அவனை எதிர்கொண்டு வணங்கி நின்று; "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளுதற்குக் காரணம் யாது" என்று வினாவினார். அதற்கு முத்திநாதன் "உங்கள் கடவுளாகிய பரமசிவன் ஆதிகாலத்திலே அருளிச்செய்த சைவாகமங்களுள் எவ்விடத்துங் காணப்படாத ஓராகமத்தை உமக்கு போதிக்கும்படி கொண்டு வந்தேன்" என்றான், மெய்பொருணாயனார் அதைக் கேட்டு, "இதைப்பார்க்கிலும் உயர்ந்தபேறு அடியேனுக்கு உண்டோ? அந்தச் சைவாகமகத்தை வாசித்து அடியேனுக்கு அதன்பொருளை அருளிச்செய்யவேண்டும்" என்று பிரார்த்திக்க முத்திநாதன் "பட்டத்தரசி இல்லாமல் நீரும் நானும் வேறிடத்திருக்கவேண்டும்" என்றான். உடனே மெய்ப்பொருணாயனார் தம்முடைய மனைவியாரை அந்தப்புரத்துக்குப் போம்படி செய்து, பொய்வேடங் கொண்ட முத்திநாதனை ஆசனத்தின் மேல் இருத்தி, தாம் கீழே இருந்துகொண்டு, "இனி அருளிச் செய்யும்" என்றார். முத்திநாதன் தன்கையில் இருந்த வஞ்சகக் கவளிகையை மடியின்மேல் வைத்து, புத்தகம் அவழிப்பவன் போல அவிழ்த்து, மெய்ப்பொருணாயனார் வணங்கும்போது, அக்கவளிகையில் மறைத்து வைத்த உடைவாளை எடுத்து, அவரைக்குத்த; அவர் சிவவேடமே மெய்ப்பொருலென்று அவனை வணங்கினார். அம்முத்திநாதன் உள்ளே புகுந்த பொழுதே "இராசாவுக்கு என்ன அபாயம் சம்பவிக்குமோ" என்று மனசை அங்கேயே செலுத்திக்கொண்டிருந்த தத்தனென்பவன் நொடியளவிலே உள்ளே புகுந்து, தன்கை வாளினால் அப்பகைவனை வெட்டப்போனான். அதற்குமுன் உடைவாளினாலே குத்தப்பட்டு இரத்தஞ்சொரிய விழப்போகின்ற மெய்ப்பொருணாயனார், விழும்பொழுது தத்தனே, இவர் சிவனடியாராதலால் இவருக்கு ஓரிடையூறும் செய்யாதே" என்று கையினாலே தடுத்து விழுந்தார். அப்பொழுது தத்தன் மெய்பொருணாயனாரைத் தலையினால் வணங்கி, அவரைத் தாங்கி, "அடியேன் செய்யவேண்டிய குற்றேவல் யாது" என்று கேட்க: மெய்ப்பொருணாயனார் "வழியிலே இவருக்கு யாவரொருவரும் இடையூறு செய்யாதபடி இவரை அழைத்துக் கொண்டு போய் விடு" என்று சொன்னார். அப்படியே தத்தன் முத்திநாதனை அழைத்துக் கொண்டு போம்பொழுது அம்முத்திநாதன் இராசாவைக் குத்தின சங்கதியை அறிந்தவர்களெல்லாரும் அவனைக் கொல்லும்படி வந்து சூழச்சூழ, அவர்களெல்லாரையும், 'இந்தச் சிவபத்தருக்கு ஒருவரும் இடையூறுசெய்யாதபடி இவரை அழைத்துக்கொண்டுபோய் விடும்பொருட்டு இராசாவே எனக்கு ஆஞ்ஞாபித்தார்" என்று சொல்லி, தடுத்தான். அவர்களெல்லாரும் அதைக் கேட்டவுடனே பயந்து நீங்கிவிட: தத்தன் அவனை அழைத்துக்கொண்டு நகரத்தைக் கடந்து சென்று, அவனுக்குரிய நாட்டுவழியிலே அவனை விட்டு, நகரத்துக்குத் திரும்பி, சிவவேடங்கொண்ட முத்திநாதனை யாதொரு இடையூறும் வராமல் அழைத்துக் கொண்டு போய்விட்ட சமாசாரத்தைக் கேட்பதற்கு விரும்பி முன்னேயே நீங்கிவிடக்கூடிய உயிரைத்தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருணாயனாருக்குமுன் சென்று, வணங்கி நின்று, "சிவபத்தரை இடையூறு ஒன்றும் வராதபடி கொண்டுபோய்விட்டேன்" என்று சொன்னான். அதைக் கேட்ட மெய்பொருணாயனார் 'இன்றைக்குநீ எனக்குச் செய்த உபகாரத்தை வேறார்செய்ய வல்லார்" என்று சொல்லி, பின்பு தமக்குப் பின் அரசாளுதற்குறிய குமாரர்களையும் மந்திரிமுதலானவர்களையும் நோக்கி, சைவாகமவிதிப்படி விபூதிமேல் வைத்த அன்பைப் பாதுகாக்கும்படி போதித்து, கனகசபையிலே ஆனந்ததாண்டவம் செய்தருளுகின்ற சபாநாதரைத் தியானம்பண்ணினார். அப்பொழுது சபாநாதர் மெய்ப்பொருணாயனாருக்குத் தோன்றி, அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.
திருச்சிற்றம்பலம்


மெயப்பொருள் நாயனார் புராண சூசனம்

1.சிவாலயங்களை விதி வழுவாது நடத்தல்

சிவாலயங்களிலே நித்தியமாகிய பூசையும் நைகித்திகமாகிய திருவிழாவும் தவறாது நடத்தற்கு வேண்டும். நிபந்தங்கள் அமைத்து, அவைகளைச் சைவாகமவிதிப்படி சிறிதாயினும் வழுவாது நடத்துவித்தல் அரசனுக்குக் கடனாம். அவ்வாறு செய்யாது ஒழிவனாயின்; அவனுக்கும் அவனால் ஆளப்படும் உலகத்துக்கும் பெருங்கேடு விளையும். இதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "ஆற்றரு நோய்மிகுமவனி மழைகுன்றும் - போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் - கூற்றுதைத் தான்றிருக் கோயில்களானவை - சாற்றிய பூசைக டப்பிடிற் றானே." எ-ம். "முன்னவனார்கோயிற் பூசைகண் முட்டிடின் - மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங் - கன்னங் களவு - மிகுத்திடுங் காசினிக் - கென்னரு ணந்தி யெடுத்துரைத்தானே", எ-ம் வரும். இச்சிவபுண்ணியத்தைச் சிறிதாயினும் தவறாது நடாத்தினவர் இம்மெய்ப்பொருணாயனார் என்பது, இங்கே "மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங்கோயி - லெங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல் - பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.

2. சிவவேடமே மெய்ப்பொருள் எனக் கொள்ளல்

ஒரு அரசன் கீழ்வாழும் குடிகள், அவ்வரசனுடைய புத்திரனைக் காணும்பொழுது, அவனிடத்தே குணம் குற்றம் பாராமல், மிக்க அச்சத்தோடும் அவனை வணங்குவர்கள் அன்றோ? அதுபோலவே, சருவலோகைக நாயகராகிய சிவனுக்கு அடிமைகளாய் உள்ளார், அவருடைய விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடம் தரித்தவர்களைக் காணும்பொழுது, அவர்களிடத்தே குணம் குற்றம் பாராமல் அவர்களை வணங்குவர்கள். அது, "மண்ணாளு மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும் வையகத்தார் பாராதே வணங்கிடுவ ரஞ்சி - யெண்ணாளு மிறைய மிலன் றிருவேடந் திருநீ றிட்டார்கள் குணங்குணக்கே டெனுமிரண்டு மெண்ணார் - விண்ணாளத் தீவினையை வீட்டியீட விழைந்தார் விரும்பியவ ரடிபணிவர் விமலனுரை விலங்க - லொண்ணாதே யெனக்கருதி யொருப்பட்டே யமல னொப்பரிய புரிவாழ்வு மற்றையருக் குண்டோ" என்னும் சிவதருமோத்தரத்தால் உணர்க.
இம்மெய்ப்பொருணாயனார் இச்சிவவேமே மெய்ப்பொருள் எனக் கொண்டார் என்பதும், தாம் தேடிய செல்வம் எல்லாம் பொய்ப்பொருள் எனத் தெளிந்து அதனிற் சிறிதும் பற்று வையாது மெய்ப்பொருளாகிய சிவவேடம் இட்டவர்களுக்கே கொடுத்து வந்தார் என்பதும், இங்கே " திரைசெய் நீர்ச் சடையா னன்பர் வேடமே சிந்தை செய்வார்" என்பதனாலும், "தேடிய மாடுநீர் செல்வமுந் தில்லை மன்று - ளாடிய பெருமானன்பர்க்காவன வாகு மென்று - நாடிய மனத்தி னோடு நாயன்மாரணைந்த போது - கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார்" என்பதாலும் உணர்த்தப்பட்டன. நெஞ்சுவிடு தூதில், "வெண்ணீறும் - வேடமும் பூசையு மெய்யென்றான் பொய்யென்றான் - மாடையும் வாழ்க்கை மனையுமே" என்றார் உமாபதிசிவாசாரியார்.
சிவன் தாம் படைத்த இச்சரீரத்தைக் காக்கும் பொழுது அழிப்பவர் ஒருவரும் இல்லை; படைத்துக் காக்கும் அவரே பின்னும் அழிக்கும் பொழுது அதனை இப்பூமியிலே வைத்துக் காப்பவர் ஒருவரும் இல்லை. ஆதலால், ஆன்மாக்கள் தமக்கு உறவாகிய சிவனை மறந்து அசுத்தமும் அநித்தியமுந் துக்கமுமாகிய தமது சரீரத்திலே பற்று வைத்து, அதனைத் தாமே பாதுகாக்க வல்லரென முயலுதல் அறியாமையேயாம். இவ்வறியாமையை உடையோர், தமது சரீரத்தை எவ்வாற்றானும் தாம் காத்தல் கூடாமையால், அச்சரீரமும் நீங்கி, மறுமைக் கண்ணே இழிவு பொருந்திய பிறப்பையும் அடைந்து, வருந்துவர். ஆதலால், சிவனே பஞ்சகிருத்தியத்துக்கும் அதிகாரி என்றும், அவராலே எய்தப்படும் முத்தியே சுத்தமும் நித்தியமும் சுகமுமாய் உள்ளது என்றும், தெளிந்த மெய்யுணர்வுடையோர், இச்சரீரத்திலே சிறிதும் பற்றின்றி, முத்தியின்கண்ணே பேராசை உடையராய், இச்சரீரத்தை அச்சிவன் வசமாக ஒப்பித்து, அவரையே பற்றி நிற்பர். அது, "தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் - வானைக் காவல் கொண்டு நின்றா ரறியா நெறியானே - யானைக் காவிலரனே பரனே யண்ணா மலையானே - யூனைக் காவல் கைவிட் டுன்னை யுகப்பா ருணர்வாரே" என்னும் சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தால் அறிக.
இம்மெய்பொருணாயனார் இம்மெய்யுணர்வு உடையராகி, தமது சரீரத்திலும் சிறிதும் பற்று இன்றி, உயிர்க்கு உறவாகிய சிவனது திருவடிகளிலேயே இடையறாத பெரும்பற்று உடையராய், தம்வசம் இறந்து பரவசராய் நின்றவர். அது, இவர் தம்முடைய பகைவன் சிவவேடங் கொண்டு வந்து தமக்குச் சிவாகமம் போதிப்பான் போலக் காட்டி, தம்மை உடைவாளினாலே குத்தும் போதும், சிவவேடமே மெய்ப்பொருள் என்று அவனை வணங்கினமையாலும்; அவனைக் கொல்லப் புகுந்த தத்தனைத் தடுத்து, அவனுக்கு இடையூறு நிகழாவண்ணம் அவனை அழைத்துக் கொண்டு போய்விடும்படி செய்தமையாலும் துணியப்படும்.

3. சரீரம் நீங்கும்போது சிவத்தியானம் வழுவாமை

அவாவே பிறவிக்கு வித்து. ஆதலால், சரீரம் நீங்கும் பொழுது யாதொரு பொருளையும் அவாவாமல், சிவனுடைய திருவடிகளையே, அழலிடைப்பட்ட மெழுகு போலமனம் கசிந்து உருக, உரோமம் சிலிர்ப்ப, ஆனந்த அருவி சொரிய, இடையறாது தியானித்தல் வேண்டும். இதற்குப் பிரமாணம்; சோமவாரவிரதகற்பம். "மரிக்கும்போ துன்னும் வடிவினை யாவி - பரிக்கு நினைவு பரித்து" ஆதலினாற் "சுற்றத் தவரைநினை யாதமலன் - பாத நினைக பரிந்து" என வரும்.
இவ்வாறே இம்மெய்ப்பொருணாயனார், சரீரம் நீங்கும் பொழுது, தம்முடைய புத்திரர் முதலியோர் மேல் சிறிதும் மனம் அழுந்தாதவராகி, விபூதி மேல் அன்பு செய்தற் பொருட்டு அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி, தாம் சிதம்பர சபாநாதருடைய திருவடிகளைத் தியானித்தார். மெய்யறிவுடையார்க்கு, தமது சரீர நீக்கத்திலே, சிவன் தமக்கு முன்னின்று அருளல் வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை. அது "அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து - பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமாவுன்னைச் - சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை - யெங்குற்றா யென்ற போதா லிங்குற்றே னென்கண் டாயே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறிக. வேண்டுவார் வேண்டியதே ஈவாராகிய சிவன் அவ்வுள்ளக் கருத்தை முற்றுவித்து அருளுவர் என்பது, இம்மெய்பொருணாயனார் தியானித்தபடியே அவருக்கு எதிர் நின்று காட்சி கொடுத்து அருள் செய்தமையால், துணியப்படும். தன் வாணாள் முழுதும் உயிர்ச் சார்பினும் பொருட்சார்பினும் சிறிதும் உள்ளே பற்றுவையாமல், நிற்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், நடக்கும் போதும், இடையறாத மெய்யன்போடு சிவத்தியானம் செய்தவர்க்கே, இறக்கும் போதும் அச்சிவத்தியானம் கைகூடும். ஆதலால், சிவனை எந்நாளும் இடையறாது தியானம் பண்ணுக. "நின்று மிருந்துங் கிடந்து நடந்துநினை - யென்றுஞ் சிவன் றாளிணை." என்று வருத்தமறவுய்யும் வழியிலே கூறப்படுதல் காண்க.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment