விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில் வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும் வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற் சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.
மலைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாகிய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, "அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள்ள சங்கம பத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கள் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் மிகமகிழ்ந்து, "இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது" என்று அருளிச் செய்தார். இந்தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனார் அவ்விறன்மிண்டநாயனாரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங்களுக்குத் தலைவராக்கியருளினார்.
திருச்சிற்றம்பலம்
விறன்மிண்ட நாயனார் புராண சூசனம்
சங்கமபத்தி முதிர்ச்சி
சிவனிடத்தே இடையறாத அன்பு செய்து, அவருடைய திருவடிகளை அணைய வொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் இயல்பினை உடைய மலசம்பந்தங்களைக் களைந்த மெய்யுணர்வு உடையோர், தம்முடன் இணங்குவோர்களை உயிர்க்கு உயிராகிய சிவனை மறப்பித்துத் தீ நெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் வீழ்த்தித் துயருறுத்தும் அஞ்ஞானிகளுடனே சிறிதும் இணங்காதொழிந்து தம்முடன் இணங்குவோர்களைச் சிவனிடத்தே அன்பை விளைவித்து நன்னெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் நின்றும் எடுத்து வாழ்விக்கும் மெய்ஞ்ஞானிகளாகிய சிவனடியார்களோடுங் கூடி, அவர்கள் திருவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவன் என்றே பாவித்து வணங்குவர்கள். இதற்குப் பிரமாணம் சிவஞான போதம். "செம்மலர் நோன்றாள் சேர லொட்டா - வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ - மாலறநேய மலிந்தவர் வேடமு - மாலயந் தானு மரனெனத் தொழுமே." எ-ம். "மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் - சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - யறப்பித்துப் - பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரு - மெய்த்தவரை மேவா வினை" எ-ம் வரும்.
இவ்விறன்மிண்ட நாயனார் இவ்வாறே, சிவனுடைய திருவடிகளையே பற்றி நின்று, மலசம்பந்தங்களை ஒழித்து, சிவனடியார்களுடன் இணங்கி, அவர்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே வழிபட்டனர் என்பது, இங்கே "செப்பற்கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி - யெப்பற் றினையு மறவெறியா ரெல்லை தெரிய வொண்ணாதார் - மெய்ப்பத் தர்கள் பாற் பரிவுடையா ரெம்பிரானார் விறன்மிண்டர்." என்பதனாலும், "நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி நலஞ்சிறந்த - பதிகளெங்குங் கும்பிட்டுப் படருங் காதல் வழிச்செல்வார் - முதிரு மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டத் - தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந் தொழப் பெற்றார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.
சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே. சிவனடியாரிடத்து அவமானம் பண்ணிச் சிவலிங்கத்திலே பூசை செய்தலாற் பயன் இல்லை என்பது சிவாகமத் துணிவாதலானும்; சிவபத்தரிடத்து அன்புடையராய் அவர் வழி நிற்பினன்றி, உலகியல்பு மாறிச் சிவானுபூதியுணர்வு மேலிடுதல் கூடாமையானும், இந்நாயனாரது உள்ளமானது சங்கமபத்தியிலே மிக முதிர்ச்சி உற்றது. அதனாலன்றோ, இவர், தேவாசிரியமண்டபத்தில் எழுந்தருளியிருந்த சிவனடியாரை வணங்காது செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரை வலிய ஆண்ட பரசிவனையும், அடியார் திருக்கூட்டத்துக்குப் புறகு என்றும், அச்சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியபின், அடியார் திருக்கூட்டத்துக்கு உள்ளொன்றும், அருளிச் செய்தார். இவர், அடியார் கூட்டத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்லக் கண்டமையால் அவரை அத்திருக்கூட்டத்துக்குப் புறகு என்று கூறியது ஒக்கும்; சருவஞ்ஞராகிய சிவனை அவ்வாறு கூறியது குற்றமாகாதோ எனின், ஆகாது. இவர், தற்போதம் சீவித்து நின்றவழி, இவ்வாறு சொன்னாராயில், குற்றம் ஏறும்; இவர், சிவன் பணித்தபடி செய்து, பரம் அற்று, சிவானுபவம் மேலிட்டு, சிவாதீனமாய் நிற்கையால்; இவர் கூறியது சிவன் கூறியதேயாம். அக்கருத்து, இங்கே "வன்றொண்டன் புறகென் றுரைப்பச் சிவனருளாற் - பெருகா நின்ற பெரும் பேறுபெற்றார்" என்பதினும், "பிறைசூடிப் - பூணாரரவம் புனைந்தார்க்கும் புறகென் றுரைக்க மற்றவர் பாற் - கோணாவருளைப் பெற்றார்மற் றினியார் பெருமை கூறுவார்." என்பதினும், அமைந்து கிடந்தமை நுண்ணுணர்வால் உணர்க. காருண்ணிய சமுத்திரமாகிய சிவனே, தமது அடியாரிணக்கம் இல்வழிப் பிறவிப் பிணி தீர்ந்து உய்தல் கூடாமையைச் சருவான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டும்; சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருத்தொண்டத்தொகை செய்வித்து, சிவனடியார்கள் தம்மிடத்துச்செய்த அன்பின்றிறத்தையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது திருவருட்டிறத்தையும் யாவரும் உணர்ந்து தம்மிடத்து அன்பு செய்து உய்தற்பொருட்டும்; தமது திருவுள்ளத்து முகிழ்த்த பெருங்கருணையினாலே, இந்நாயனாரிடத்து ஆவேசித்து நின்று கூறிய கூற்றாம் இது என்பது தெளிக. சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்பது; "ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்" என்னும் சிவஞான சித்தியாரால் உணர்க. மெய்யுணர்வுடையார் சிவனடியார் இணக்கத்தையே பொருளென வேண்டுவர் என்பது "தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்குமற்றை - மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை - யாவர்கோனென்னை யும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ - மேவினோ மவனடியாரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே" "உடையா ளுன்ற னடுவிருக்கு முடையாணடுவு ணீயிருத்தி - யடியே னடுவு ளிருவீரு மிருப்ப தானா லடியேனுன் - னடியார் நடுவு ளிருக்கு மருளைப் புரியாய் பொன்னம் பலத்தெம் - முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே" என்னுந் திருவாசகத்தினாலும், "நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே - யல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளு - மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு - மெல்லாம் வெளிமயக்கேயிறை வாகச்சி யேகம்பனே." என்னும் பட்டணத்துப் பிள்ளையார் பாடலாலும் காண்க.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment