Monday, 3 September 2018

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-7)

ஔவையின் குறளில் சொல்லப்பட்ட அபூர்வ யோக ரகசியங்கள்(பகுதி-7)
***************
********

(நன்றி அண்ணாமலை சுகுமாரன் ஐயா...)

அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை
**************

22) வெள்ளி பொன் மேனியதொக்கும்  வினையுடைய
     உள்ளுடம்பின் ஆய ஒளி

வினையுடைய  = உடலால் செய்யும் கர்மாக்களுக்கு
மூல காரணமாக உள்ள ,
உள்ளுடம்பின் =  சூக்ஷும தேகம் ,
ஆய ஒளி   = உண்டாகிய பிரகாசமானது ,
வெள்ளி      =  சுக்கிலத்தை ஒத்த வெள்ளியின்                                                                                                       நிறத்தையும்

பொன்     = நாதத்தை ஒத்த பொன்னின் நிறத்தையும்
மேனியதொக்கும்  =  பெற்று தூல உடம்பை ஒக்கும் .
அதாவது தூல உடலை   உள்ளுடம்பு  ஒத்திருக்கும் அது
ஆணாக இருந்தால் வெள்ளியின் நிறத்தையும் , பெண்ணாக இருந்தால் பொன் நிறமாகவும் இருக்கும்
இதில் "வினையுடைய"  என்ற பதத்தை அவ்வைப் பிராட்டி
சில அற்புத்த் தகவல் சொல்ல உபயோகிக்கிறார் .

அதாவது நாம் செய்யும் வினைகளுக்கு கரணம் இந்த தூல உடம்பு இல்லை .அது பாவம் அப்பிராணி , அது அப்பாவி போல் சும்மா இருந்து ,சொல் பேச்சை கேட்டு  பழி சுமக்கிறது .

 உடம்பு ,மனம் , பிராணன் ஆன்மா போன்ற பலவற்றின் தொகுதி மனிதன் .
முண்டக   உபநிஷதம் ஒரு அருமையான இருபறவை உவமையை கூறுகிறது .
" இணை பிரியாத , ஒரேபோன்ற இரண்டு பறவைகள் ஒரு  மரத்தில் அமர்ந்திருக்கின்றன
அவற்றுள் ஒன்று மரத்தில் விளையும் பழத்தை ருசித்து
தின்கிறது .மற்றொன்று தின்னாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது "
இதில் மரம்   என்பது உடல் .

பழத்தை தின்னும் பறவை ஜீவன் ( மனம் + பிராணன் )
 அது உள்ளுடம்பு  இது நிழல்  அது பழத்தைத் தின்று அதனால் வரும் விளைவுகளான இன்ப துன்பைத்தை அடைகிறது
பழத்தை தின்னாத பறவை ஆன்மா ஆகும் , இது நிஜம்

இதில் நாம் போற்றி வளர்க்கும் தூல உடம்பு வெறும் மரம் போல் தான் எந்த பங்கும் இல்லை .

ASTRAL TRAVEL
 *******

23 ) சென்று உண்டு வந்து திரிதரும் உள்ளுடம்பு
       இது என்றும் கெடாதது .

உள்ளுடம்பு =  சூக்ஷும தேகம்
சென்று =  சங்கற்ப்பித்த இடங்களுக்கு சென்று ,
உண்டு    = அங்கிருக்கும் விஷயங்களை உணர்ந்து ,
வந்து     = உடலுக்கு திரும்பி வந்து ,
திரிதரும்    =  இவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் ,
இது            = இந்த உள்ளுடம்பு
என்றும்      =   எந்த காலத்திலும்
கெடாதது     = அழிவில்லாதது .

எந்த காலத்திலும் அழிவில்லாத உள்ளுடம்பு , தான் சங்கற்ப்பித்த இடங்களுக்கு
சென்று திரிந்து அங்கிருக்கும் விஷயங்களை உணர்ந்து சுற்றித் திரியும் இயல்பு கொண்டது என்கிறார் .

இதை   ASTRAL TRAVEL என்பார்கள் . ஆனால் இது அனைவருக்கும் இயல்பானது அல்ல .
ஒரு வேளை  ஒவ்வை இந்த குறள்  எழுதிய காலத்தில் இது அனைவருக்கும் சாத்தியமாக இருந்திருக்கலாம் .ஆயினும் தற்போது போதிய பயிற்சி இல்லாமல் இது சாத்தியமில்லை .என்பதே எனது எண்ணம் .
ஞானிகள் உள்ளுடம்பை பலப்படுத்தி அதை வசப்படுத்திக்கொண்ட பிறகே ,தூல தேகத்தை விடுத்து ,
உள்ளுடம்பால் அற்புதங்களை செய்து வருகிறார்கள் .அதை இந்த குறள் ஆமோதிக்கிறது .

இந்த உள்ளுடம்பு    எங்கும் செல்லும் ஆற்றல் கொண்டது .
அது நம்மை சுற்றி உள்ள 14 லோகங்களுக்கும் செல்வதாக கூறுகிறார் .
தூல தேகத்திற்கு அழிவு உண்டு , உள்ளுடம்பு ஆன்மாவுடன்சேர்ந்து சென்று  மீண்டும் பிறக்கும் ..
முக்தி எனும் விடுதலை பெறும்  வரை இது தொடரும் .

நம் உடலை ஐந்து அடுக்கு கொண்டது என முந்தய பகுதியில் கூறியிருந்தேன் .
அது அன்னமய கோசம் , மனோ மய கோசம் , பிராணமய கோசம் ,விஞ்ஞான மய கோசம் , ஆனந்த மய கோசம்
என அறிந்தோம் .
இதில் அன்னமய கோசம் என்பது இந்த தூல உடம்பு
இதைப்பற்றி விபரமாக தனது இரண்டாம் அதிகாரத்தில்
ஔவைப்பிராட்டி கூறியிருந்தார் .
மனோ மய கோசம் , பிராணமய கோசம் ,இவை இரண்டையும் கொண்டதையே உள்ளுடம்பு எனப்படுகிறது .
உள்ளுடம்பு பற்றி தனது மூன்றாம் அதிகாரத்தில்இப்போது  கூறுகிறார் .
விஞ்ஞான மய கோசம் , ஆனந்த மய கோசம் என்ற இரண்டும் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டது .

தூல தேகத்தில் உள்ள ஐம் பூத ஆற்றல் பெறும் ஐந்து பொறிகளும் , மெய் வாய் ,கண் மூக்கு செவி இவை அனைத்தும் பொறிகள் மட்டுமே , அதாவது இயந்திரம் போன்றது ,     கண் இருந்தாலும் , பார்த்தல் என்பது உள்ளுடம்பின் அங்கமான மனம் , பிராணன் தொடர்பால்
மட்டுமே அமைகிறது .காது இருந்தாலும் கேட்டல் என்பது உள்ளுடம்பின் தொடர்பால் அமைகிறது .இவ்வாறே அனைத்து தூல உடம்பின் இயக்கமும் அமைகிறது .

உள்ளுடம்பைப் பற்றி 10 குறளில் கூறிவிட்டு பின் , வாயுதாரணை  போன்ற விஷயங்களை அடுத்த அதிகாரங்களில் விவரிக்கிறார் .

24 ) வருபயனுண்டு மகிழ்ந்துடனாய் நிற்கும்
       ஒருபயனைக்காட்டும் உடம்பு

உடம்பு என்றாலே இந்த அதிகாரத்தைப் பொறுத்தவரை உள்ளுடம்புதான் அது மனம் பிராணன் இவற்றால் ஆனது .

வருபயன்   = விருப்பு வெறுப்பு இல்லாது வருகின்ற
                            பலனை
உண்டு      = நுகர்ந்து
மகிழ்த்துடன்   = ஆனந்தப்படுவதோடு ,
ஆய் நிற்கும்    = தனது இயக்க சக்தியான பிராணவத்துடன்
                          நிலைத்து நிற்கும் ,
உடம்பு      = உள்ளுடம்பு
ஒரு பயனை     =ஒப்புயர்வற்ற பலனை ,
காட்டும்        =   வெளிப்படுத்தும் .

வருபயன்  என்றால் வருகின்ற பயன் என்பது மட்டுமல்ல ,
வருகின்ற பயனை "வருபயன் " என்ற மட்டில் எத்துடனும் ஒப்பு நோக்காமல் நிகழ்காலத்தில் கொண்டு விருப்பு வெறுப்பு இன்றி நுகரும் தன்மை .

நாம் எந்தப்பொருளை கண் கொண்டு பார்த்தாலும் ,கண் அங்கே போவதற்கு முன் நமது எண்ணம் அங்கே முதலில் சென்று விடும் .
கண் எண்ணத்தின் தன்மைக்கு ஏற்ப  காணும் பொருளை உணரும்    .உள்ளதை உள்ளபடிக்காணும் சக்தி
நமது கண்ணிற்கு அநேகமாக கிடையாது .
பார்ப்பது ஒன்று உணர்வது ஒன்றாகவே இருக்கும் .
இதனால்தான் அசைகின்ற கயறு பாம்பாகவும் ,
-பாம்பு  கயிறாகவும் உணரப்படுகிறது .
வருபயனை வேண்டுதல் வேண்டாமல் உணர்வது இறைத்
தன்மை என்கிறார் திருவள்ளுவர் .

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல- குறள்
இத்தகைய சமநிலை இல்லாத மனிதர்கள் தான் நினைத்தது சரி என்று நினைப்பதும் விவாதிப்பதும்  .தன கருத்திற்கு மாறானவை அனைத்தும் தவறு என்று சாதிப்பவர்களாகவும் இருப்பர்  பிறர் கொண்டிருக்கும் கருத்திலும் ஏதாவது நியாயம் இருக்கும் என்று அவர்களால்  எண்ணவே இயலாது .   பிறரை எதிர்ப்பதிலும் பிறர் கூறுவதை மறுப்பதிலும் பிறர் எதிர்ப்பிலிருந்து தன்னை காப்பதிலும் இவர்களின்  முழு கவனமும் ஈடு பட்டிருக்கும்.
இவர்கள்  மனஅமைதி பற்றி ஒன்றும் அறிந்திருக்க மாட்டார்கள்  மனஅமைதி எத்தனை இனிமையானது என அறியாதவர்கள் .துடிப்பாக இருப்பதாக எண்ணி  "சும்மா" இருக்கும் சுகம் அறியாமல் இருப்பார்கள் .

இவ்வாறு வரு பயனை ( நடப்பவைகளை) மட்டும் மனம் சம்பந்தப்படாமல் வேண்டுதல் வேண்டாது உள்ளது உள்ளபடி உணர்ந்து சமநிலையுடன் மன அமைதியாக இருக்கும் போது ,   உள்ளுடம்பு ஆனந்தத்துடன் இருக்கும் அப்போது  அது தனது மூலமான ஆன்மாவுடன் சம்பந்தப்பட்டு ஒப்பற்ற நிலை பெறும் என்கிறார் ஒவ்வைப் பிராட்டி இந்தக்குறளில் .

வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
ஒருவரும் நினது திருவடிப் புகழை
உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
அரும்பெறல் செல்வமே அமுதே
குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே-- என்கிறார் வள்ளல் பெருமான் இராமலிங்க சாமிகள் .

25 ) அல்லல் பிறப்பை அகற்றிவிக்கும் ஆய்ந்தாய
      தொல்லை உடம்பின்  தொடர்பு

உள்ளுடம்பு ,தொல்லை தரும்  பிறவியை ஒழித்துவிடும் என்கிறார் இந்தக்குறளில் அவ்வையார் .

 ஆய்ந்தாய   =    ஆராய்ந்து பார்த்தால்
அல்லல் பிறப்பை அகற்றிவிக்கும்   = தொல்லைகளைக்       கொடுத்துக்கொண்டிருக்கும் தொடரும் ,பிறவிகளை நீக்கும்

தொல்லை உடம்பின்   =  தூலஉடம்பினுடன்
தொடர்பு                    =    ஏற்படும் உள்ளுடம்பின் தொடர்பு .

தொல்லைகளைக்   கொடுத்துக்கொண்டிருக்கும் தொடரும் ,பிறவிகளை நீக்கும் ஆற்றல் தூல உடம்பிற்கு
உள்ளுடம்பின்  தொடர்பு கொண்டு  ஏற்படுகிறது .

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று
வீடுற்றேன். என்கிறார் அருளாளர் மாணிக்கவாசகர் .

பிறவி பிணியை நீக்கும் வழி அறியாமல் எத்தனை எத்தனை பிறவிகள் பெற்று அல்லலுறுகிறோம் .

பிறவிப் பிணி அறுபட வேண்டுமானால் என்ன என்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று  ஒருபாடலில் கம்பன் கூறுவதைபாருங்கள்

 தெளிந்து தீவினையைச் செற்றர் பிறவியின் தீர்வரென்னவிளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும்நெளிந்துறை புழுவை நீக்கி நறவுண்டு நிறை கின்றேனால்அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்---

 அதாவது மனம் தெளிந்து தீய செய்கைகளை விட்டவர்கள் பிறவி நோயை ஒழித்தவராவர்
இதை ஞானிகளும் வேதங்களும் விரிவாகக் கூறுவர்

நானோ புழுக்கள் நெளியும் கள்ளில் அந்த புழுக்களை வடிகட்டிவிட்டுச் சாப்பிட்டு இப்படி மகிழ்வடைகிறேன் . இது  எதற்குச் சமம் என்றால் எரியும் நெருப்பை நெய்யை ஊற்றி அணப்பதற்குச் சமம் என்று சுக்ரீவன் சொல்லுவது போல் கம்பர் கூறுகிறார் ..

அதாவது மனம் தெளிந்து தீவினைகளை விட்டவர்கள் ,
பிறவி பிணி நீக்க இயலும் .அப்படி இல்லாமல் இப்பிறப்பில் , பிறப்பின் சுவையில் இன்பம் கொண்டு மேலும்
வினை சேர்க்கும் போக்கில் உழன்று கொண்டிருக்கிறோம் .

அதை ஊக்குவிக்கும் மனம் உள்ளுடம்பில் அடங்கியது .
உள்ளுடம்பின் தெளிதலால்
தூல உடம்பு தீவினை தவிர்க்கும் .

எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள் எத்தனை பேர் ? இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம் .  எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ? என பட்டினத்தார் கூறுவது போல் பிறவி ஒழிக்கும் உபாயம் அறிவதே வாழ்வின் பயன்
என்று தெளித்தல் நன்று .

26 ) நல்வினையும் தீவினையும் உண்டு  திரிதரும்
      செய்வினைக்கு வித்தாம்  உடம்பு
தூல தேகமானது ,
நல்வினையும்  = புண்ணியம் எனப்படும் நல்கர்மத்தையும் ,தீவினையும் =    பாவம் எனப்படும் தீயகர்மத்தையும் ,உண்டு = அனுபவித்து ,

திரிதரும்    = திரிந்து கொண்டிருக்கும் , ஆனால் ,

உடம்பு   = உள்ளுடம்பு எனும் சூக்ஷும தேகம் ,

செய்வினைக்கு =   செய்யும்படியானகர்மவினை போக்கும்ஞான கர்மங்களுக்கு
வித்தாம் =   விதையாக அமையும் .

அதாவது தூல தேகம் கொண்டு செய்யும் நல்வினை தீவினை எனும் கர்மங்களுக்கு ,பதிலாக  உள்ளுடம்பு ஞானவழியில்நின்றுவினைகளை  போக்கஉதவிடும்   விதை போல்இருந்துஉதவிடும்

நாம் நல்வினை செய்தாலும் ,தீவினை செய்தாலும் அவைகளின்  பலனை அனுபவித்து , மீண்டும் மீண்டும் அத்தகைய வினைகளை செய்து , அதன் சுழற்சியிலேயே நீடித்து நம்மை இந்த பிறவியில் சுவை கொள்ளச் செய்யும்

தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்
தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு
கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை
நாடிநிற்கு மென்றார் நயந்து  என்கிறது நீதி நெறி

இதன் பொருள்:

பெண்ணே!  அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

கையில் பூட்டும் விலங்கு  தங்கத்தால் செய்தால் என்ன ?இரும்பில் செய்தால் என்ன விலங்கு ,விலங்கு தானே என்கிறார் ஓஷோ . அப்போது வினையே ஆற்றாமல் இருக்கலாமா என்றால் அதுவும் முடியாது .செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம யோகவழி.

செயல்களை செய்யும்போதே , நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக்கண்ணாடிகளால்தான் இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை

சொல்வதற்கும் ,படிப்பதற்கும் இவை எளியவைதான்  .நடை முறைப்படுத்த அத்தனை கடினமானது .

ஆனால் செய்யும் கர்மங்களை வெறுப்பு வெறுப்பு இன்றி செய்வது எப்படி சாத்தியம் என்றால் அதற்க்கு ஒரே வழி ,அதனால் கிடைக்கும் பலனை நம்முடையது  இல்லை என முன்பே துறப்பதால் தான் சாத்தியமாகும்  இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

இதை அடைய நமது முக்குணம் எனும் ரஜோ ,தமஸ், சாத்வீகம் எனும் முக்குணத்தில் உயர்குணமான சத்துவத்தில் இருந்து செயல்களை செய்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் .

கீதையும் இதையே வலியுறுத்துகிறது .ரஜோகுணத்தில் உதித்தஎந்த  கர்மமும் பெரும்பாவத்தில் ஆழ்த்துபவை என்கிறது . இராஜச குணத்தால் தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே ஞானத்தின் குறிக்கோள்

தொடரும்........

No comments:

Post a Comment