Monday, 3 September 2018

திருமூலர் கூறும் கரு உற்பத்தி ரகசியம்-6

திருமூலர் கூறும் கரு உற்பத்தி ரகசியம்-6

முதற்கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதற்புதலாய்ப் பலமாய்நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவதுபோல
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப் பிரானே. 489.

489. இறைவனுக்கு இன்பம் தருவது:
**************

தாவரமானது முதலில் கிழங்காய் இருந்தது. முளையாய் ஆகியது. பின் அது புதராய் ஆகிறது. பின் பழமாய்ப் பயன் அளிக்கிறது. அதுவே அந்தத் தாவரத்தின் இன்பமாய் அமைவது. அது போல் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பயன் அளிப்பதே ஆதியாகிய இறைவனுக்கு இன்பம் தருவதாகும்.

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினின் உள்ளே. 490.

490. இறைவனைத் தவத்தால் உணர முடியும் :
****************

மற்றத் தேவரைவிடப் பெருமை உடையவனாயினும் எம் தலைவனான இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து அவற்றுள் விளங்குகின்றான். அப்படிப்பட்ட இறைவனைத் தேவராலும் உணர முடியாது. ஆனால் மக்கள் தங்கள் தவ வன்மையினால் உணர முடியும்.

பரத்தில் கரைந்து பதிந்த நற் காயம்
உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திருவருளாலே. 491.

491. உயிர்களின் பக்குவத்துக்கேற்ப உடலினை அமைத்தல் :
*****************

மேன்மை பொருந்திய இறைவனிடம் நுண்மையாய் ஒடுங்கிய நல்ல உடல், மீண்டும் பருவத்துக்கு ஏற்பப் பயனை அடைய வேண்டி, அலைகடலில் கதிரவன் வெம்மையால் உப்புத் திரண்டு உருக்கொள்வதைப் போல், இறைவனது அருளால் மீண்டும் தூல உடம்பு கருவில் உருவாகிறது.

ஐயன் வகுத்த திருக்குறளை சிறு அடிகளில் பெரும் உண்மைகளை விளக்கும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கொண்டாடுகிறோம்.
"கடுகைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று புகழ்வார்கள்.

 திருவள்ளுவரின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல திருமூலரின் திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல் சான்றாக உள்ளதல்லவா? நான்கு வரிகளில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்!

சிசுவின் வளர்ச்சியைப் பற்றி பஞ்சரத்தினத்தில் ஊர்வசி சொல்லியிருப்பது. அமிர்த மயமான சுக்கிலமும் சுரோணிதமும் கூடி ஒரு கனிபோல் பிரகாசமான ஒரு பையிலே கடலிலே முத்து உதித்ததைப் போலும் அருகம்புல்லின்மேல் பனித்துளி நிற்பதுபோலும் தோன்றிப்பயிராகும். கடுகின் அளவில் பத்தில் ஒருபங்கே அளவினதான சுக்கிலம் சுரோணிதத்தில் சேர்ந்தவுடன் திரண்டு ஒரு உருவமாகும். உடனே அதை வாயு மூடிக்கொண்டு மதில்போலும், சுற்றிலும் அடைக்கப்பட்ட வேலிபோலும் உயரமாக வளர்ந்து காப்பாற்றும். அந்த விந்துவுடன் பிராணவாயுவும் கூடிக்கொள்ளும். உதானவாயு என்ற உணவைத்தரும் வாயு நாதமும், விந்தும் கூடி கருவை வளர்க்கும். அதனோடு வினைப்பயன்களும் வந்து சேர்ந்துகொள்ளும்.

சிசுவின் வளர்ச்சி ஈசன் விதித்தபடி ஐந்து நாட்களில் அது அரும்பாகும். பத்து நாட்களில் திரண்டு ஓர் உருவாகும். பதினைந்து நாட்களில் முட்டையாக வளர்ந்து விடும். ஒரு மாதத்தில் வச்சிர கம்பம்போல் உருப்பெற்று விளங்கும்.

இரண்டாவது மாதத்தில் தலை, முதுகு என்ற உருப்புகள் தோன்றும்.

மூன்றாவது மாதத்தில் இடுப்பு, கைகால்கள், விரல்கள் தோன்றும்.

நான்காவது மாதத்தில் பாதங்கள், மூக்கு தோன்றும்.

ஐந்தாவது மாதத்தில் வாய், நாக்கு, காது, கண், விழி முதலியன தோன்றும்.

 ஆறாவது மாதத்தில் நகங்கள் தோன்றும்.

ஏழாவது மாதத்தில் மயிர், எலும்பு, நரம்புகள் உண்டாகும். நரம்பு முதலானவற்றுடன் கூடிய இப்பிண்டத்தை சடலநீர் சூழ்ந்து கொண்டிருக்கும். எனினும் மூச்சும் நடைபெறத் தொடங்கும்.

எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவிலுள்ள சத்து ஒளிக் கதிர் போலவும், வீழும் அருவி போலவும் தொடர்ச்சியாக கபால வாசல் (உச்சி) வழியாக சிசுவின் உடலில் பாயும். சிசு தேனை உண்டு வளர்வதைப்போல் அதை உண்டுவளரும்.

ஒன்பதாவது மாதம் பூர்வ ஜன்ம வாசனையால் தன்னை உண்டாக்கிய ஈசன் திருவடிகளை நினைத்தபடி கரம் கூப்பி அருள்தா என்று வேண்டி தவம் செய்யும்.

பத்தாம் மாதம் இறைவனின் திருவருளால் தாயின் வயிற்றில் உள்ள அபானவாயு பிடித்துத் தள்ள சிசு காலால் உதைத்துக் கொண்டு சிசுவின் தலையானது தாயின் யோனியின் வாயிலை முட்டிக்கொண்டு வந்து பிறக்கும்.மாயா சத்தி, கிரியா சத்திகளின் வசப்பட்டு மாயையால் பூர்வ ஜன்ம நினைவுகளையும் மறந்து நல்வினை தீவினை என்ற இரு வினைகளையும் ஏந்தி அவ்வினைகளின் பயனாய் உண்டான பிணிகளுடன் கொடியோடு கூடிய சுரையைப்போல் புவியின்மீது வந்துவிழும். அத்துடன் குழந்தையானது தனக்கும் இறைவனுக்கும் உள்ள நினைவுகளை மறந்துவிடும். அதன் பின் பொய்யான வாழ்க்கையைத் தொடங்கிவிடும்.

இன்னும் தொடரும்...

No comments:

Post a Comment