போற்றுதிரு வாமூரில் வேளாண் டொன்மைப் பொருவில்குறுக் கையரதிபர் புகழ னார்பான் மாற்றருமன் பினிற்றிலக வதியா மாது வந்துதித்த பின்புமரு ணீக்கி யாருந் தோற்றியமண் சமயமுறு துயர நீங்கத் துணைவரரு டரவந்த சூலை நோயாற் பாற்றருநீ ளிடரெய்திப் பாடலிபுத் திரத்திற் பாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார். வந்துதமக் கையரருளா னீறு சாத்தி வண்டமிழா னோய்தீர்ந்து வாக்கின் மன்னாய் வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி வியன்சூலம் கொடியிடபம் விளங்கச் சாத்தி யந்தமிலப் பூதிமக னரவு மாற்றி யருட்காசு பெற்றுமறை யடைப்பு நீக்கிப் புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு பூம்புகலூ ரான்பாதம் பொருந்தி னாரே.
திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புலழனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கின்ற புத்திரியார் பிறந்தார். அவர் பிறந்து சிலவருஷஞ் சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணீக்கியார் என்கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார் உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். மருணீக்கியார், தந்தையாருக்குப் பெருமகிழ்ச்சியுண்டாகும்படி, பலகலைகளையும் கிரமமாகக் கற்று வல்லவராயினார்.
திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயசு ஆனபொழுது, அப்புகழனார் மரபிற்கு ஒத்த மரபினையுடையவரும், சிவபத்தியிலே சிறந்தவரும், இராஜாவிடத்தில் சேனாதிபதியாயுள்ளவருமாகிய கலிப்பகையார் என்பவர், அப்புகழனார் இடத்திலே சில முதியோர்களை அனுப்பி, திலகவதியாருக்குந் தமக்கும் மணம் பேசுவித்தார். புகழனார் அதற்கு இசைந்தமை கண்டு, அம்முதியோர்கள் மீண்டும் சென்று, கலிப்பகையாருக்குத் தெரிவித்தார்கள். கலிப்பகையார் தாம் விவாகஞ்செய்தற்கு முன் தம்முடைய அரசனது ஆஞ்ஞையினாலே சேனைகளோடும் சில நாளிலே அவன் பகைஞராகிய வடதேசத்தரசரிருக்குமிடத்தைச் சேர்ந்து அவர்களோடு நெடுநாள் யுத்தஞ் செய்தார். அங்கே அப்படி நிகழுங்காலத்திலே இங்கே புகழனார் தேகவியோகம் அடைந்தார். அப்பொழுது அவர் மனைவியராகிய மாதினியார் சககமனஞ் செய்தார். அவர்கள் பிள்ளையாகிய திலகவதியாரும் மருணீக்கியாரும் சுற்றத்தார்களோடு மிக மனக் கவலையுற்று, சுற்றத்தாருள் அறிவால் அமைந்த பெரியோர்கள் ஒருவாறு தேற்றத்தேறி, தந்தை தாயர்களுக்குச் செய்ய வேண்டும் அந்தியகருமங்களை முடித்தார்கள்.
இங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்தகளத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம்பைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சமாசாரந் திலகவதியாருக்குச் செவிப்புலப்பட அவர் "என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்" என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணீக்கையார் வந்து, அத்திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது, "அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்தபின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்றோ உயிர்வைத்துக் கொண்டிருக்கின்றேன்; அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின், அடியேன் உமக்கு முன்னமே இறந்துவிடுவேன்" என்றார். திலகவதியார் அதைக் கேட்டு தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும், என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேறொருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.
மருணீக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அமைத்தார். சோலைகளை வைப்பித்தார்; குளங்களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புலவர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். பிரபஞ்சவாழ்வினது அநித்யத்துவத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். எல்லாச் சமயங்களுள்ளும் சற்சமயம் இது என்று அறியுமறிவு அவருக்குத் தலைப்படவில்லை. அவர் பாடலிபுத்திரம் என்னும் நகரத்திற் சென்று, சமணர்களுடைய பள்ளியையடைந்து, அங்குள்ள சமணர்களுடைய போதனா சத்தியினாலே அவர்கள் அநுட்டிக்கின்ற ஆருகதசமயமே முத்தியை அடைதற்குத் தகுந்த நெறியென்று அம்மருணீக்கியார் அந்தச் சமணசமய நூல்களெல்லாவற்றையும் கற்று, அவைகளிலே மகாபாண்டித்தியம் உடையராயினார். அதுகண்ட சமணர்கள் அவருக்குத் தருமசேனர் என்று பெயரிட்டு அவரைத் தங்கள் மதாசாரியராகக் கொண்டு வழிபட்டார்கள். அவர் தமது வித்தியாசாமர்த்தியத்தினாலே பௌத்தர்களை வாதிலே வென்று புகழ் பெற்று, ஆருகத சமயாசாரியர்களுக்குள்ளே சிரேஷ்டராய் இருந்தார். அது நிற்க.
திருவாமூரிலே இருந்த திலகவதியார் சிவபெருமானிடத்திலே பத்திமுகுந்து சிவபுண்ணியங்கள் செய்ய விரும்பி, கெடிலநதிக்கு வடகரையில் இருக்கின்ற திருவதிகை வீரட்டானம் என்னுந் திருப்பதியிற்சென்று பரமசிவனை வணங்கி, சிவ சின்னங்களைத் தரித்து, தினந்தோறும் சூரியோதயத்துக்கு முன்னே திருக்கோயிலின் உள்ளும் புறமும் திருவலகிடுதல், கோமயத்தினாலே மெழுகுதல், திருநந்தவனங்களிற் சென்று புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு வந்து திருமாலை தொடுத்துச் சுவாமிக்கு சாத்தக்கொடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்துவந்தார். செய்துவரு நாளிலே தம்முடைய தம்பியாராகிய மருணீக்கியார் கபடமார்க்கமாகிய ஆருகதத்திலே பிரவேசித்தமையை நினைந்து துக்கசாகரத்தில் அமிழ்ந்தி, வீரட்டானேசுரரை வணங்கி "சர்வாபீஷ்டவரதரே! தேவரீர் அடியேனை ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின் தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைப் பறித்தெறிந்து விட்டு நின்று கொண்டே உண்கின்ற சமணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழியிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதினின்றும் தூக்கிக் காப்பாற்றியருளல் வேண்டும்" என்று பலமுறை விண்ணப்பஞ் செய்தார். பரமசிவன் திலகவதியார்க்குச் சொப்பனத்திலே தோன்றி "தபோதனியே! நீ உன் மனக்கவலையை ஒழி; உன்னுடைய தம்பி துறவியாகி நம்மை அடையும் பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ் செய்திருக்கின்றான். அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதினாலே அந்நியமதத்திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொள்வோம்" என்று சொல்லி மறைந்தருளினார்.
பரமசிவன் திருவாய்மலர்ந்தருளியபடியே, அவருடைய திருவருளினாலே, தருமசேனருடைய வயிற்றிலே கொடிய சூலைநோய் உண்டாகிக் குடலைக் குடைதலுற்றது. அதனால் அவர் வருந்தி நடுக்கமுற்றுச் சமண்பாழியறையில் விழுந்தார். தமக்குக்கைவந்த சமணசமய மந்திரோச்சாரணத்தால் தடுக்கவும், அச்சூலை நோய் தடைப்படாமல் மேற்கொண்டது. மேற்கொள்ளவே, சர்ப்பவிஷந் தலைக்கொண்டாற் போல மயங்கி மூர்ச்சை அடைந்தார். அது கண்ட சமணர் பலர் வந்து கூடி, "இந்தச் சூலைநோய் போலக் கொடிய நோய் முன்னொரு போதும் கண்டறியோம் இதற்கு யாது செய்வோம்." என்று துக்கமுற்று, பின் கமண்டலத்தில் இருக்குன்ற ஜலத்தை அபிமந்திரித்துக் குடிப்பித்தார்கள். அதனாலே தணியாமையால் மயிற்பீலிகொண்டு காலளவுந் தடவினார்கள். அதினாலுந் தணியாமல், சூலைநோய், முன்னிலும் அதிகப்பட; தருமசேனர் அதைச் சகிக்கலாற்றாதவராய்த் துன்பப்பட்டார். சமணர்கள் அதுகண்டு "ஐயோ! இதற்கு நாம் யாது செய்வோம்" என்று மனங்கலங்கி, "இந்நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்" என்று சொல்லிக்கொண்டு, அவரைக் கைவிட்டுப் போயினார்கள். பின் தருமசேனர் தம்முடைய சகோதரியாராகிய திலகவதியாரை நினைந்து, அவரே தமக்கு உதவிசெய்ய வல்லார் எனத் துணிந்து, தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, தம்முடைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்பினார். அப்பாகுகன் திருவதிகையிற் சென்று, அத்திலகவதியாரை ஒரு திருநந்தவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, "நான் உம்முடைய தம்பியார் ஏவலினால் இவ்விடத்துக்கு வந்தேன்" என்று சொல்ல; திலகவதியார் "தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா" என்றார். அதற்கு அவன் "ஆம்! அவர் கொடிய சூலைநோயினால் மிக வருந்துகின்றார். சமணர்களெல்லாரும் அந்நோயைத் தீர்த்தற்கு வன்மையின்மையால், அவரைக் கைவிட்டு விட்டார்கள். அவர் அது கண்டு, என்னை நோக்கி, "அந்தச் சமாசாரத்தைச் சகோதரியாராகிய உமக்கு தெரிவித்து, தாம் உய்யும் நெறியைக் கேட்டுக் கொண்டு இரவிலே தம்மிடத்து வரும்பொருட்டு என்னை ஏவினார்" என்றார். திலகவதியார் "பதிதராகிய சமணர்களுடைய பள்ளிக்கு நான் வரேன். இதைத் தம்பிக்குச் சொல்லு" என்றார். அது கேட்ட பாகுகன் மீண்டு தருமசேனரிடத்திற்சென்று, அதைத் தெரிவிக்க; தருமசேனர் "இனி இதற்கு யாது செய்வேன்" என்று சோகித்தார்.
அப்பொழுது சிவபெருமானுடைய திருவருள் கூடுதலால் மருணீக்கியார் "இந்தத் துர்ச்சமயமாகிய ஆருகதமார்க்கப் பிரவேசத்தால் என்னை வருத்தும் இந்நோய் நீங்கும்படி, சற்சமயமாகிய சைவ சமயத்தை அநுட்டிக்கின்ற திலகவதியாருடைய திருவடிகளை அடைவேன்" என்று கருதினார். அக்கருத்துப் பிடித்தெழுப்ப எழுந்து, சமணர்களுடைய ஸ்தானத்தைக் கடந்து, உடுத்த பாயையும் உறியில் உற்ற கமண்டலத்தையும் மயிற் பீலியையும் நீக்கி வஸ்திரந்தரித்து, தமக்குப் பற்றுக்கோடாகக் கைதந்து வருகின்றவர்களைப் பற்றிக்கொண்டு, ஒருவருங் காணாதபடி இரவிலே ஆருகதமார்க்கப் பிரவேசத்தால் தமக்குக் கிடைத்தவைகளில் சூலைநோய் ஒன்று மாத்திரம் உடன்றொடர, திருவதிகையிற் சென்று, திலகவதியாருடைய திருமடத்தை அடைந்து, அவருடைய திருவடிகளை நமஸ்கரித்து, "நமது குலத்தார் செய்த தவப்பயனெல்லாம் திரண்டு ஒரு வடிவெடுத்தாற்போலும் அம்மே! அடியேன் கொடிய சூலை நோயைச் சகிக்கலாற்றா மையால், உம்மையே கதியென்று அடைந்தேன். இனித்தமியேன் உய்ந்து கரையேறும் வழியை அருளிச்செய்யும்" என்று விண்ணப்பஞ்செய்து, பாதத்திலே விழுந்து அயர்ந்தார். திலகவதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச் செய்தபடி முடித்ததை நினைந்து, மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலி செய்துகொண்டு "அறியாமையினாலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே! எழுந்திரும்" என்றார். தம்பியார் சூலைநோயுடன் நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலி செய்தார். திலகவதியார் "இது பரமசிவனுடைய திருவருளே; தம்முடைய திருவடிகளையடைந்த மெய்யன்பர்களுக்கு இன்னருள்புரியும் அக்கடவுளயே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்" என உபதேசித்தார். உடனே மருணீக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக்கொண்டு, வணங்கி நிற்க; திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொடுத்தார். மருணீக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி, அவ்விபூதியை வாங்கி, சரீரமுழுதிலும் அணிந்துகொண்டார்.
திலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்குத் தோண்டியும் எடுத்துக் கொண்டு, திருக்கோயிலுக்குத் தம்பியாரை அழைத்துக் கொண்டு போனார். மருணீக்கியார் வீரட்டானேசுரரைப் பிரதக்ஷிணஞ்செய்து சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அவருடைய திருவருளினாலே தமிழ்ச் செய்யுள் பாடுஞ்சத்தி உண்டாகப் பெற்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட்டும், பிற்காலத்திலே அன்போடு ஓதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும் பொருட்டும், சிவபெருமான் மேல் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கிற்று, அப்பொழுது மருணீக்கியார் தமக்கு உயிரையுந்தந்து முத்தி நெறியையுந்தந்த சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் அமிழ்ந்தி, திருமேனி முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, நிலத்திலே விழுந்து புரண்டு, "சமண சமயப் படுகுழியிலே விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய பாவியேன் சிவபெருமானுடைய திருவடியை அடைதலாகிய இந்தப் பேரின்பவாழ்வைப் பெறும்படி செய்த சூலைநோய்க்கு என்ன பிரதியுபகாரஞ் செய்வேன்" என்றார். இப்படி நிகழும்பொழுது வீரட்டானேசுரருடைய திருவருளினால் "நீ அற்புத சின்மயமதுரமாகிய தேவாரப்பதிகத்தைப் பாடினபடியால், உனக்கு நாவுக்கரசு என்னும் பெயரே சப்தலோகங்களிலும் வழங்குக" என்று சமஸ்தருக்கும் ஒரு வியப்புத் தோன்றும் படி ஒரு அசரீரி வாக்கு ஆகாயத்திலே தோன்றிற்று. அதைக் கேட்ட திருநாவுக்கரசுநாயனார் "சிவபெருமான் இத்தனை நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்த சிறியேனுக்கு இந்தப் பெரு வாழ்வைத் தந்தருளினாரே" என்று களிகூர்ந்து அத்தன்மையனாகிய இராவணனுக்கு அருளிய கருணையின் மெய்த்தன்மையை அறிந்து துதிப்பதையே மேற்கொண்டு, வணங்கினார். "திருநாவுக்கரசுநாயனார் சமண சமயம் பொய்மார்க்கம் என்பது யாவருக்கும் புலப்படும்படி சைவசமயத்திலே பிரவேசித்து அருள் பெற்றபடியால் உலகம் உய்ந்தது உய்ந்தது" என்று சொல்லித் திருவதிகையிலுள்ள சமஸ்தசனங்களும் களிப்புற்றார்கள். திருநாவுக்கரசுநாயனார் மனம் வாக்குக் காயம் என்னுந் திரிகரணங்களாலும் திருத்தொண்டு செய்யவேண்டும் என்னும் ஆசை மிகுதலால், சிவசின்னங்களைத் தரித்துக் கொண்டு தியானமறாவுணர்வும் தடையின்றி யெழுகின்ற துதிரூபமாகிய வாசகமும் உழவாரப் பணிவிடையும் உடையராயினார். திலகவதியார் தம்முடையவேண்டுகோளின் படி சிவபெருமான் தம்முடைய தம்பியாரை ஆட்கொண்ட பெருங் கருணைத் திறத்தை நினைந்து மகிழ்ந்து வணங்கினார்.
இந்தச் சமாசாரத்தைப் பாடலிபுத்திரத்தில் இருக்கின்ற சமணர்கள் கேள்வியுற்று, பொறாமை கொண்டு; "மாறுபட்ட பலசமயங்களையும் வாதில் வென்று நமது சமயத்தை ஸ்தாபித்த தருமசேனர் தமக்கு வந்த சூலைநோய் இங்கே ஒருவராலும் நீங்காமையால் உய்யும் நெறியை நாடித் திருவதிகையிற் சென்று, முன்போலச் சைவத்திலே பிரவேசித்து, அந்நோய் நீங்கி உய்ந்துவிட்டார். இனி நமது சமயம் அழிந்தது அழிந்தது" என்று துக்கித்து, தலையும் பீலியுந் தாழ ஓரிடத்திலே ஒருங்கு கூடினார்கள். கூடிய சமணர்கள் "தருமசேனருக்கு வந்த சூலை நோய் நம்மொருவராலும் நீங்காமல் சைவசமயப்பிரவேசத்தால் நீங்கி விட்ட உண்மையை நம்முடைய அரசன் அறிந்தானாகில், நம்மேற் கோபங்கொண்டு, தானுஞ் சைவனாகி, நம்முடைய விருத்தியையும் தவிர்ப்பான். இனி இதற்கு யாது செய்வோம்" என்று சொல்லித் தங்களுள்ளே ஆலோசித்து வஞ்சனையாகிய ஓருபாயத்தைத் தெரிந்து கொண்டு, பல்லவராஜனுடைய நகரத்திற் சென்று, அரண்மனை யினுள்ளே புகுந்து, அவ்வரசனை நோக்கி, "மகாராஜாவே! எங்களெல்லாருக்குந் தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய சகோதரியாராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற்கின்ற படியால், தாமும் அவர் போலாக விரும்பி, தமக்குச் சூலைநோய் வந்ததாகக் காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத்திற்சென்று, முன்போலச் சைவசமயத்திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை நிந்தை செய்தனர்" என்று சொன்னார்கள். உடனே பல்லவராஜன் கோபங்கொண்டு, "இதற்கு யாது செய்யலாம்" என்றான். அதுகேட்ட சமணர்கள் "உத்தமமாகிய நமது சமயமகிமையைக் கெடுத்து உம்முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண்டிக்க வேண்டும்" என்றார்கள். அப்பொழுது அரசன் மந்திரிமாரை நோக்கி, "இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான்.
உடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதிகையை அடைந்து திருநாவுக்கரசு நாயனாரிடத்திற் சென்று, "எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத்துக் கொண்டு வரும்படி எங்களை அனுப்பினான்; வாரும்" என்றார்கள். அதுகேட்ட திருநாவுக்கரசுநாயனார் "நாமார்க்குங் குடியல்லோம்" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, "நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்" என்றார்கள். அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங்கிப் பிரார்த்தித்து அழைக்க, "அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக்கெல்லாம் சிவபெருமான் இருக்கின்றார்" என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக் கொண்டு போய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்களை நோக்கி; "இனி இவனுக்கு யாது செய்வோம்" என்று கேட்க; சமணர்கள் "நீற்றறையில் இடல் வேண்டும்" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, "இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, "சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ" என்று அக்கடவுளைத் தியானித்து "மாசில் வீணையு மாலை மதியமும்" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது.
ஏழுநாட் சென்றபின், பல்லவராஜன் சமணர்களை அழைத்து, "நீற்றறையைத் திறந்து பாருங்கள்" என்று சொல்ல; அவர்கள் நீற்றறையைத் திறந்து நாயனார் யாதொரு ஊனமும் இன்றிக்களிப்புற்றிருத்தலைக் கண்டு ஆச்சரியமடைந்து, அரசனிடத்திற் சென்று, "அவன் முன்னே நம்முடைய சமயத்தில் இருந்து செய்த மந்திரசாதகத்தினாலே வேவாமற் பிழைத்துக் கொண்டான். இனி அவனுக்கு நஞ்சு ஊட்டுவதே தகும்" என்றார்கள். அரசன் "அப்படியே செய்யுங்கள்" என்று சொல்ல; அவர்கள் நாயனாருக்கு நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தார்கள். நாயனார் அவர்களுடைய வஞ்சனையை அறிந்து, "நஞ்சும் அமுதாம்" என்று, நஞ்சுகலந்த அந்தப் பாற்சோற்றை உண்டு இருந்தார். சமணர்கள் அதைக் கண்டு "இவனுக்கு நஞ்சும் அமுதமாயிற்று. இவ்விடத்திலே இவன் பிழைப்பானாகில் நமக்கெல்லாம் நாசமுண்டாகும்" என்று பயந்து, அரசனிடத்திற்சென்று. "நாம் நஞ்சைச் சோற்றிலே கலந்து உண்பித்தும், நம்முடைய சமய நூல்களிலே கற்றுக் கொண்ட மந்திரவலியினாலே பிழைத்துவிட்டான். அவன் இறவாதிருப்பானாகில், எங்கள் உயிரும் உம்முடைய அரசாட்சியும் நீங்குவது திடம்" என்றார்கள்.
அரசன் அதைக்கேட்டு, "இனி அவனைக்கொல்லுதற்கு; உபாயம் யாது" என்று கேட்க: சமணர்கள் "உம்முடைய யானையை அவனுக்கு எதிரேவிடுவதே உபாயம்" என்றார்கள். அரசனும் அப்படிச் செய்யும் பொருட்டு ஆஞ்ஞாபிக்க; துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனாருக்கு எதிரே யானையைக் கொண்டு வந்து விட்டார்கள். நாயனார் சிறிதும் பயமின்றி சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி தோறும் "கொடிலப் புனலு முடையாரொருவர் தமர்நா, மஞ்சுவதியாதொன்று மில்லையஞ்ச வருவது மில்லை" என்று பாடியருளினார். யானையானது அந்நாயனாரை வலஞ்செய்து, எதிராக நிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக; அதன் மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினாலே குத்தித்திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பை காட்டினார்கள். அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினால் அவர்களை எடுத்து வீசிக்கொன்றுவிட்டு, வெவ்வேறிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித்தேடி ஓடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந்நகரத்தில் உள்ளவர்களெல்லாரும் கலங்கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது.
அவ்யானைக்குத் தப்பிய சமணர்களெல்லாரும் மானமழிந்து மயங்கி மனம் வருந்தி, அரசனையடைந்து, "தருமசேனன் நம்முடைய சமயநூல்களிலே கற்றுக்கொண்ட மந்திரத்தின் பலத்தினாலே நாங்கள் விட்ட யானையைக் கொண்டே எங்கள் வலிமையைச் சிதைத்தான்" என்று சொல்லிப் புலம்பினார்கள், அரசன் கோபங்கொண்டு, "இனி அவனுக்கு யாது செய்ய வேண்டும்" என்று கேட்க; சமணர்கள் "அவனைக் கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டிக் கடலிலே தள்ளவேண்டும்" என்றார்கள். அரசன் கொலைத்தொழில் செய்வோரை நோக்கி, "தருமசேனனைக் காவலோடு கொண்டுபோய், ஒரு கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டி ஒரு படகில் ஏற்றி, சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான். கொலைத் தொழில் செய்வோர் அதைக்கேட்டு, சமணர்களும் உடன் செல்ல, அச்சஞ் சிறுது மில்லாத திருநாவுக்கரசுநாயனாரைக் கொண்டு போய், அரசன் சொல்லியபடியே கடலிலே தள்ளிவிட்டுத் திரும்பினார்கள்.
சமுத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசுநாயனார் "அடியேனுக்கு, யாது நிகழினும் நிகழுக; அடியேன் எம்பெருமானைத் தோத்திரம் பண்ணுவேன்" என்று நினைந்து, "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட; சமுத்திரத்திலே கல்லானது நாயனார்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட்டிய கயிறோ அறுந்து போயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனாரைத் தாங்கிக் கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான். நாயனார், அந்தத் திருப்பதியினின்றும் அரகரவென்னு மோசையுடன் தம்மை எதிர்கொண்ட சிவனடியார்களோடு ஆலயத்திற்சென்று, சுவாமியை வணங்கி, "ஈன்றாளுமாய்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அங்கே சிலநாள் எழுந்தருளியிருந்தார்.
பின் திருவதிகை வீரட்டானேசுரரைத் தரிசிக்க வேண்டும் என்னும் பேராசையினால் அவ்விடத்தினின்றும் பிரஸ்தானமாகி, திருமாணிகுழியையும் திருத்தினை நகரையும் வணங்கிக் கொண்டு, திருக்கெடில நதியைக் கடந்து சென்றார். அந்நாயனார், சமணர்கள் செய்த இடர்களனைத்தையும் ஜயித்து வருதலைக் கேள்வியுற்ற திருவதிகைவாசிகள் சமஸ்தரும் அவ்வூரை மிக அலங்கரித்து, மங்கல வாத்தியங்கள் முழங்க அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்தார்கள். விபூதியை உத்தூளனஞ்செய்த திருமேனியையும் தாழ்வடத்தையும் சிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தையையும் ஆனந்த பாஷ்பம் பொழிகின்ற கண்களையும் திருப்பதிகங்கள் தோன்றுகின்ற திருவாயையுமுடைய நாயனார், தம்மை எதிர் கொண்ட சனங்களோடு ஆலயத்திற் சென்று, சுவாமியை வணங்கி; "வெறிவிரவு கூவிளம்" என்னும் ஏழைத் திருத்தாண்டகத்தை எடுத்து"ஏழையேனான் பண்டிகழ்ந்தவாறே" என்று பாடினார்.
நாயனார் வீரட்டானேசுரர் மேலே பின்னும் பல திருப்பதிகங்களைப் பாடிப் பணிசெய்து கொண்டிருக்கு நாளிலே சமணர்களுடைய துர்போதனைக்கு இசைந்து தீங்கு செய்துகொண்டிருந்த பல்லவராஜன் அத்திருவதிகையிலே வந்து, நாயனாரை வணங்கி, சைவசமயத்திலே பிரவேசித்தான். சமணசமயம் பொய்யென்றும் சைவசமயமே மெய்யென்றும் அறிந்துகொண்ட காடவனென்பவனும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணருடைய பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அவைகளின் கற்களைத் திருவதிகையிலே கொண்டுவந்து, பரமசிவனுக்கு குணபரவீச்சரம் என்னுங்கோயிலைக் கட்டினான்.
அந்நாட்களிலே திருநாவுக்கரசுநாயனார் சிவஸ்தலங்கள் பலவற்றிற்குஞ் சென்று சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாட விரும்பி, அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப்பதிகம் பாடிக்கொண்டு, பெண்ணாகடத்திற்சென்று திருத்தூங்கானை மாடமென்னும் ஆலயத்திற்பிரவேசித்து, சுவாமியை வணங்கி, "சுவாமி! அடியேன் இழிவினையுடைய சமணசமயத் தொடக்குண்டு வருந்திய இத்தேகத்துடனே உயிர் வாழ்தற்குத் தரியேன். அடியேன் தரிக்கும் பொருட்டுத் தேவருடைய இலச்சினையாகிய சூலத்தையும் இடபத்தையும் அடியேன்மேற் பொறித்தருள வேண்டும்" என்னுங் கருத்தால் "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்" என்னுந் திருப்பதிகம். பாடினார், உடனே பரமசிவனுடைய திருவருளினால் ஒரு சிவபூதம் மற்றொருவருக்குந் தெரியாதபடி அவ்வாகீசருடைய திருத் தோளிலே சூலக்குறியையும் இடபக் குறியையும் பொறித்தது. நாயனார் தம்முடைய திருத்தோளிலே பொறிக்கப்பட்ட இலச்சினைகளைக் கண்டு மனமகிழ்ந்து, திருவருளை நினைந்து கண்ணீர் சொரிய விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். அவர் அந்தஸ்தலத்தில் இருக்கின்ற நாளிலே, திருவரத் துறைக்கும் திருமுதுகுன்றுக்கும் போய் சுவாமி தரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடி, கிழக்கே நிவாக்கரையின் வழியாக நடந்து, சிதம்பரத்திலே சென்று, கனகசபையிலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்ற சபாநாயகரைத் தரிசித்து விழுந்து நமஸ்கரித்து எழுந்து, இரண்டு கைகளும் சிரசின்மேலேறிக்குவிய, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, அக்கினியிற்பட்ட வெண்ணெய்போல மனங்கசிந்துருக, "என்று வந்தாய்" என்னுந் திருக்குறிப்போடு நிருத்தஞ்செய்கின்ற சுவாமியுடைய திருநயனத் தினின்றும் பொழிகின்ற திருவருளாலாகிய ஆனந்தமேலீட்டினாலே "கருநட்ட கண்டனை" என்னுந் திருவிருத்தமும், "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்னுந் திருநேரிசையும் பாடினார். அவர் சுவாமி தரிசனம் பண்ணி, திருக்கோயிற்றிரு முற்றத்தினும் திருவீதிகளினும் உழவாரப்பணிசெய்து கொண்டு சிலநாள் அங்கே எழுந்தருளியிருந்தார். அப்பொழுது "அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்" என்னுந் திருக்குறுந்தொகை பாடினார். பின் திருவேட்களத்துக்குச் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, திருக்கழிப்பாலையை அடைந்து சுவாமிதரிசனஞ்செய்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சிலநாள் அங்கே இருந்தார். பின் அவ்விடத்தினின்றும் நீங்கி, வழியிலே, "பனைக்கை மும்மத வேழமுரித்தவன்" என்று எடுத்து "அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும்மறந் துய்வனோ" என்னுந் திருக்குறுந் தொகை பாடிக்கொண்டு, சிதம்பரத்தை அடைந்து, "அரியானை யந்தணர் தஞ்சிந்தை யானை" என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடிக்கொண்டு திருக்கோயிலிற் சென்று, சபாநாதரைத் தரிசித்து வணங்கி,"செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்கும்" என்னுந் திருநேரிசை பாடினார்.
திருநாவுக்கரசு நாயனார் அங்கே பாடற்றொண்டும் உழவாரத்தொண்டுஞ் செய்து கொண்டிருக்கு நாளில். ஒருநாள், சீர்காழியிலே பரமசிவனது திருவருளினால் உமாதேவியார் ஞானப்பாலை ஊட்ட உண்டு வேதார்த்தங்களைத் தமிழிலே தேவாரமாகப் பாடியருளுகின்ற திருஞானசம்பந்தமூர்த்தி நாயநாருடைய மகிமையை அடியார்கள் சொல்லக் கேள்வியுற்று, அவருடைய திருவடிகளை வணங்கல் வேண்டும் என்னும் ஆசை முகுதியினால், சபாநாயகரைத் தொழுது அநுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு, திருவீதியிலே அங்கப் பிரதக்ஷிணஞ் செய்து; அத்திருப்பதியின் எல்லையைக் கடந்து, திருநாரையூரைப் பணிந்து பாடி, சீர்காழிக்குச் சமீபித்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சீர்காழிக்குத் திருநாவுக்கரசு நாயனார் வருதலைக் கேள்வியுற்று, அத்தியந்த ஆசையோடு அடியார்கள் பக்கத்திலே சூழ அவரை எதிர்கொண்டார். திருநாவுக்கரசு நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க, அவர் தம்முடைய திருக்கரங்களினால் இவருடைய திருக்கரங்களைப் பிடித்து எடுத்து, தாமும் அஞ்சலி செய்து, "அப்பரே" என்றார். அதற்குத் திருநாவுக்கரசு நாயனார் "அடியேன்" என்றார். அவ்விருவரும் தாங்கள் ஒருவரை ஒருவர் காணப்பெற்றதனால் மிகமனமகிழ்ந்து ஆலயத்திற் சென்று, சுவாமியை வலங்கொண்டு நமஸ்கரித்து எழுந்தார்கள். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அப்பமூர்த்தியை நோக்கி, "அப்பரே! உம்முடைய சுவாமியைப் பாடும்", என்று சொல்ல, இவர் திருப்பதிகம் பாடி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமடத்திற் சென்று, அவரோடு அளவளாவிப் பலநாள் இருந்தார்.
ஒருநாள் திருநாவுக்கரசுநாயனார் சோழமண்டலத்திலுள்ள சிவஸ்தலங்களெல்லாவற்றையும் வணங்கவேண்டும் என்று தமது திருவுள்ளத்தே தோன்றிய ஆசையைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு விண்ணப்பஞ் செய்து, அவரோடும் திருக்கோலக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் பண்ணினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவ்விடத்தினின்றும் மீண்டருளினார். அப்பமூர்த்தி திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை, திருநன்றியூர், திருநனிப்பள்ளி முதலிய ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு, காவேரியாற்றின் இருகரை வழியாகவுஞ் சென்று திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திருவெதிர்கொள்பாடி, திருக்கோடிக்கா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச்சரம், திருப்பழையாறை என்கின்ற ஸ்தலங்களைப் பணிந்து பாடி திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்; அங்கே சுவாமி தரிசனஞ்செய்து "கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை" என்னுந் திருப்பதிகம் பாடவும்; பரமசிவன் "நல்லூருக்கு வாவா" என்று அருளிச்செய்தார். அப்பமூர்த்தி திருநல்லூரிலே சென்று, சுவாமியை வணங்கி எழுந்தார். எழும்பொழுது, சுவாமி "உன்னுடைய நினைப்பை முடிக்கின்றோம்" என்று சொல்லி தம்முடைய திருவடிகளை அவர் சிரசின்மேலே சூட்டியருளினார். அப்பமூர்த்தி"நினைந்துருகு மடியாரை" என்று திருத்தாண்டக மெடுத்து, திருப்பபாட்டிறுதிதோறும் "திருவடி யென்றலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே" என்று பாடியருளினார். இன்னுந் திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சில நாள் அங்கிருந்தார். இருக்கு நாட்களிலே, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு திருநல்லூருக்குத் திரும்பிவிடுவார்.
சிலநாட் சென்றபின், அப்பமூர்த்தி திருநல்லூரினின்றும் நீங்கி, திருப்பழனத்தை வணங்கிக் கொண்டு, திங்களூரின் வழியாகச் சென்றார். செல்லும்பொழுது, அவ்வூரிலே அப்பூதியடிகணாயனார் என்பவர் தம்முடைய புத்திரர்களுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைத் தரித்தும் தம்முடைய அன்னசத்திரம், கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றிலும் தனித்தனியே "இது திருநாவுக்கரசுநாயனாருடையது" என்று தீட்டியுமிருத்தலைக் கேள்வியுற்று, அவருடைய வீட்டுக்கு எழுந்தருளினார். அப்பூதிநாயனார் அப்பமூர்த்தியைத் தம்முடைய மனைவியார் புத்திரர் முதலாயினரோடும் வணங்கி, அங்கே திருவமுது செய்யும்படி பிரார்த்தித்து, அதற்கு அந்நாயனார் உடன்பட்டது கண்டு, அமுது சமைப்பித்து, தமது புத்திரராகிய மூத்த திருநாவுக்கரசை நோக்கி, "தோட்டத்திற் சென்று வாழைக்குருத்து அரிந்து கொண்டுவா" என்று சொல்லியனுப்பினார். அவர் விரைந்து வாழைக்குருத்து அரியப் புகுந்தபொழுது; ஒரு பாம்பு அவரைத் தீண்டிற்று. அதை அவர் பேணாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யும்படி குருத்தை அரிந்து கொண்டு, விரைவிலே திரும்பிவந்து, விஷந்தலைக்கொள்கையால் மயக்கமடைந்து, வாழைக்குருத்தைத் தம்முடைய தாயார்கையிலே கொடுத்துவிட்டு, கீழேவிழுந்து இறந்தார். அது கண்டு அப்பூதிநாயனாரும், அவர் மனைவியாரும், "ஐயோ! இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை மறைத்துவைத்துச் சிறிதுந் தடுமாற்றமின்றி அப்ப மூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி! எழுந்து வந்து திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். அப்பமூர்த்தி அங்கு நிகழ்ந்த உண்மையைத் திருவருளினால் அறிந்துகொண்டு, அவர்களுடைய அன்பை நினைந்து திருவருள் சுரந்து, சவத்தைச் சிவாலயத்தின் முன் கொணர்வித்து "ஒன்று கொலாமவர் சிந்தை" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே அப்புத்திரர் உணர்வு பெற்று எழுந்தார் அப்பூதிநாயனார் தம்முடைய புத்திரர் பிழைத்ததைக் கண்டும், அதைக்குறித்துச் சந்தோஷியாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யாதிருந்தமையைக் குறித்துத்துக்கித்து வருந்தினார். அவ்வருத்தத்தை நீக்கும் பொருட்டு, அப்பமூர்த்தி அவருடைய வீட்டிற்சென்று, திருவமுது செய்து, அங்கே எழுந்தருளியிருந்தார். சிலநாட்சென்றபின் திங்களூரினின்றும் நீங்கி, திருப்பழனத்திற்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து, "சொன்மாலை பயில்கின்ற" என்னுந் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே அப்பூதி நாயனாரை "அழலோம்பு மப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்" எனச் சிறப்பித்தருளினார். அங்கே எழுந்தருளியிருக்கு நாளிலே, திருச்சோற்றுத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்குப் போய் வருவார்.
வெகுநாட்சென்ற பின் அப்பமூர்த்தி திருநல்லூருக்குச் சென்று சிலநாள் அங்கே வசித்து, பின் திருவாரூருக்குப் போகக் கருதி, அதனை நீங்கி, பழையாறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திருநாறையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளமர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு; திருவாரூரை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகங்கள் பாடிக் கொண்டிருந்தார். ஒரு திருப்பதிகத்திலே, நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றினமையைச் சிறப்பித்துப் பாடினார். அந்தத் திருப்பதியில் இருக்கின்ற அரனெறியன்னும் ஆலயத்தையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். அங்கிருக்கும் நாட்களிலே, திருவலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் என்னும் ஸ்தலங்களுக்கும் போய், திருப்பதிகம் பாடிக் கொண்டு, அவ்விடத்திற்குத் திரும்பிவிட்டார். திருவாதிரை நக்ஷத்திரத்திலே வீதிவிடங்கப் பெருமானுடைய திருவிழாவை அடியார்களுடன் சேவித்து, மகிழ்ந்து இருந்தார். அந்நாட்களிலே திருப்புகலூருக்குப் போம்படி கருதி, திருவாரூரினின்றும் நீங்கி, பல தலங்களையும் பணிந்து சென்றார். அந்நாளிலே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்புகலூருக்கு வந்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு முருக நாயனாருடைய திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் அப்பமூர்த்தி திருவாரூரினின்றும் திருப்புகலூரை நோக்கி, எழுந்தருளி வருகின்றார் என்று கேள்வியுற்று, அடியார் கூட்டத்தோடுஞ் சென்று, அவரை எதிர்கொண்டார். அப்பமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, "அப்பரே நீர் வரும் நாளிலே திருவாரூரிலே நடந்த பெருமையைச் சொல்லும்" என்றார். அப்பமூர்த்தி திருவாதிரைச்சிறப்பை "முத்து விதான மணிப் பொற்கவரி"என்னுந் திருப்பதிகத்தினாலே சொல்லியருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு "நான் திருவாரூருக்குப் போய் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு இவ்விடத்திற்கு வருவேன்" என்று சொல்லித் திருவாரூருக்கு எழுந்தருள; அப்பமூர்த்தி திருப்புகலூருக்கு வந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார். திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னுந் தலங்களுக்கும் போய்த் தரிசனஞ் செய்து கொண்டு திருப்புகலூருக்குத் திரும்பினார். சிலநாட் சென்றபின், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவாரூரினின்று நீங்கி, திருப்புகலூருக்கு எழுந்தருளி வந்தார். அப்பமூர்த்தி அவரை எதிகொண்டு அழைத்து வந்து, முருகநாயனாருடைய திருமடத்தில் அவரோடும் எழுந்தருளியிருந்தார். இருக்கு நாளிலே சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்கநாயனாரும் அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு இருந்தார்கள்.
சிலநாளாயினபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் அப்பமூர்த்தியும் திருப்புகலூரினின்றும் நீங்கி, திருநீலநக்க நாயனாரும் சிறுதொண்டநாயனாரும் முருகநாயனாரும் மற்றையடியார்களும் அநுமதிபெற்றுக்கொண்டு போய்விட, திருவம்பர் என்னுந்தலத்தை அடைந்து வணங்கி, திருக்கடவூரிற் சென்று வீரட்டானேசுரரைப் பணிந்து, குங்குலியக்கலய நாயனாரால் அவருடைய திருமடத்திலே திருவமுது செய்விக்கப்பட்டு; திருக்கடவூர்மயானத்தையும் வணங்கி, திருவாக்கூர் முதலிய திருப்பதிகளைத்தரித்து, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள். சிலநாட் சென்ற பின், மழையின்மையாலும் காவேரிப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனால் உயிர்களெல்லாம் வருத்தமுற்றன. அக்காலத்திலே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கும் திருநாவுக்கரசுநாயனாருக்குந் தோன்றி, "காலபேதத்தினாலே நீங்கள் மனவாட்டம் அடையீர்களாயினும், உங்களை வழிபடுகின்ற அடியார்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, நாம் உங்களுக்குப் படிக்காசு தருகின்றோம்" என்று திருவாய்மலர்ந்து, திருக்கோயிலின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப்பீடத்திலும், தினந்தோறும் படிக்காசு வைத்தருளினார். அவ்வடியார்களிருவரும் தாங்கள் பெற்ற படிக்காசுகளை அனுப்பிப் பண்டங்கள் வாங்குவித்து, அமுது சமைப்பித்து, "சிவனடியார்கள் எல்லாரும் வந்து போசனம் பண்ணக்கடவர்கள்" என்று இரண்டு காலங்களினும் பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் பரமசிவனுக்குக் குமாரராகையாலும் பாடற்றொண்டுமாத்திரஞ் செய்கையாலும் தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடுத்து மாற்றப்பெற்றார். அப்பமூர்த்தியோ, தாம் அக்கடவுளுக்கு அடியாராகையாலும், பாடற்றொண்டோடு கைத்தொண்டுஞ் செய்கையாலும், தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடாது மாற்றப் பெற்றார். இவருடைய திருமடங்களிலும், நாடோறுஞ் சிவனடியார்கள் போசனம்பண்ணி மகிழ்ந்திருக்குங் காலத்திலே, எங்கும் மழை பெய்து, தானிய முதலியவைகள் மிக விளைந்தமையால் பஞ்சம் நீங்கிற்று.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், திருநாவுக்கரசு நாயனாரும் திருவீழிமிழலையினின்றும் நீங்கி, திருவாஞ்சியம் முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, வேதாரணியத்தை அடைந்து; ஆலயத்திலே பிரவேசித்து வலஞ்செய்து, வேதங்கள் அருச்சித்துத் திருக்காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் அடைக்கப்பட்டேயிருக்கின்ற திருக்கதவுக்கு முன் வந்து, வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட அத்திருக்கதவை அடியார்கள் நீக்கப்பெறாமையினால் வேறோர்பக்கத்திலே ஓர்வாயிலிட்டு அதன்வழியே செல்கின்றார்கள் என்பதைக் கேட்டறிந்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அப்பமூர்த்தியை நோக்கி "அப்பரே! நாம் எப்படியும் சுவாமியை அபிமுகத்திருவாயில் வழியே சென்று தரிசிக்க வேண்டும். ஆதலால் இந்தத் திருக்கதவு திறக்கப்படும் பொருட்டு நீரே திருப்பதிகம் பாடும்" என்றார். அப்பமூர்த்தி "பண்ணினேர்மொழியாள்"என்னுந் திருப்பதிகத்தைக் திருக்கதவு திறக்கப்படும்பொருட்டுப் பாட; அது திறக்கப்படாமல் தாழ்ந்தது; அதுகண்டு, "இரக்கமொன்றிலீர்" என்று திருக்கடைக்காப்பிலே பாடி வணங்கினார். உடனே வேதாரணியேசுரருடைய திருவருளினாலே திருக்கதவு திறக்கப்பட்டது. அப்பொழுது நாயன்மாரிருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அடியார்களெல்லாரும் ஆனந்தகோஷஞ் செய்தார்கள். நாயன்மாரிருவரும் பேரின்ப வெள்ளத்திலே அமிழ்ந்தி எழுந்து, உள்ளே புகுந்து, சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அரிதில் வெளியே வந்தார்கள். அப்பொழுது அப்பமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை நோக்கி, "எம்பெருமானுடைய திருவருளினாலே இந்தத்திருக்கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் என்றும் வழங்கும் பொருட்டுத் தேவரீர் இது அடைக்கப்படும்படி திருப்பதிகம் பாடியருளும்" என்றார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகத்திலே முதற்பாட்டுப் பாடியமாத்திரத்திலே திருக்கதவு அடைக்கப்பட்டது. அதுகண்டு, நாயன்மாரிருவரும் திருவருளை வியந்து களிப்புற்று வணங்கினார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் எடுத்த திருப்பதிகத்தை முடித்தருளினார். அன்று தொடுத்து அந்தத் திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கம் என்றும் நிகழ்ந்தது. அங்கே நிகழ்ந்த அற்புதத்தைக் கண்ட அடியார்கள் சமஸ்தரும் ஆச்சரியங்கொண்டு, உரோமாஞ்சங்கொள்ள கண்ணீர்சொரிய நாயன்மாரிருவருடைய திருவடிகளிலும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
நாயன்மாரிருவரும் திருமடத்தை அடைந்தபின் திருநாவுக்கரசு நாயனார், தாந்திருப்பதிகம் முழுதும் பாடிய பின்னே திருக்கதவு திறந்த அருமையையும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதற்பாட்டைப் பாடினவுடனே கதவு அடைந்த எளிமையையும் நினைந்து, "சுவாமியுடைய திருவுள்ளம் இதுவென்று அறிய மாட்டாமல் அயர்கின்றேன்" என்று கவன்று, மிக அஞ்சி திருமடத்திலே ஒரு பக்கத்திலே போய், வேதாரணியேசுரருடைய திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டு அருநித்திரை செய்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்திற்சென்று, "நாம் வாய்மூரில் இருப்போம். அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா" என்று அருளிச் செய்தார். அப்பமூர்த்தி.
"எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்முர்ச் செல்வனா
ரங்கே வாவென்று போனார தென்கொலோ"
என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு எழுந்து, வேதாரணியத்தினின்றும் புறப்பட்டு, விரைந்து போக; சுவாமி அவருக்கு முன்னாகத்தாம் அவருக்கு முன் காட்டியருளிய திருக்கோலத்தோடும் நடந்தருளினார். நெடும்பொழுது பரமசிவனுக்குப் பின்னாகச் செல்கின்ற அப்பமூர்த்தி அவரைச் சமீபிக்கப் பெற்றிலர். சுவாமி சமீபத்திலே காட்சி கொடுப்பவர் போல ஒரு திருக்கோயிலை எதிரே காண்பித்து, அதனுள்ளே புகுந்தருள; அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் அப்பமூர்த்தி திருவாய்மூருக்குப் போகின்றார். என்று கேள்வியுற்று வந்து சேர்ந்தார். அப்பமூர்த்தி சுவாமி மறைந்தமையைக் குறித்துத் துக்கித்து, அடியார்களிற் சிறந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரே திறக்கவேண்டும் என்பதை நினையாமல் திறந்து குற்றஞ்செய்த சிறியேனுக்கு ஒளிக்கலாம். ஒரு திருப்பதிகத்தின் முதற்பாட்டாலேயே திருக்கதவை அடைப்பித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இங்கே வந்திருக்கின்றார். அவருக்கு எப்படி ஒளிக்கலாம் என்றார். உடனே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குக் காட்சி கொடுத்தருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தரிசித்து ஸ்தோத்திரம் பண்ணி, அப்பமூர்த்தியுங் காணும்படி காட்ட; அப்பமூர்த்தியும் தரிசித்து "பாடவடியார் பரவக்கண்டேன்" என்னுந் திருப்பதிகம் பாடினார். சுவாமி அத்திருப்பதிகத்தை ஏற்றுக்கொண்டு எழுந்தருள; நாயன் மாரிருவரும் திருவாய்மூரை அடைந்து, சுவாமிதரிசனஞ்செய்து கொண்டு, சிலநாள் அங்கிருந்த பின் வேதாரணியத்துக்குத் திரும்பி வந்து, அங்கே சுவாமி தரிசனஞ் செய்து கொண்டிருந்தார்கள்.
இருக்குநாளிலே, திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டியநாட்டிலே ஆருகதசமயம் பரம்பச் சைவம் குன்றிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, சமணர்களை வென்று சைவஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு, அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப்பொழுது திருநாவுக்கரசுநாயனார் சமணர்களுடைய கொடுமையை நினைந்து, மதுரைக்குப் போகாதிருக்கும் படி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைத் தடுக்க; திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அதற்கு இசையாமல் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினார்.
திருநாவுக்கரசுநாயனார் வேதாரணியத்திலே சிலநாள் இருந்து. பின் அதனை நீங்கி, திருநாகைக்காரோணம் முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவீழிமிழலையை அடைந்து, சிலநாள் அங்கிருந்து, பின் திருவாவடுதுறையிற் சென்று, சுவாமி தரிசனம் பண்ணி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு ஒரு திருப்பதிகத்தின் பொருட்டு ஆயிரஞ் செம்பொன் கொடுத்தருளிய திறத்தை "மாயிருஞாலமெல்லாம்"என்னுந் திருப்பதிகத்தினாலே புகழ்ந்துபாடி, பழையாறையிற் சென்றார். அங்கே வடதளி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சிவலிங்கப்பெருமானைச் சமணர்கள் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று, சமீபமாகிய ஓரிடத்திற்சென்று, திருவமுது செய்யாமல் சுவாமியைத் தியானித்து, "சுவாமி! அடியேன் தேவரீருடைய திருவுருவைக்கண்டு வணங்கியன்றிப் போகேன். அந்தத் திருவுருவை மறைத்த சமணர்களுடைய செய்கையைக் கெடுத்தருளும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிவபெருமான் அரசனுக்குச் சொப்பனத்திலே தோன்றி, "நாம் சமணர்களால் மறைக்கப்பட்டிருக்கின்றோம். நாவுக்கரசன் நம்மை வெளிப்பட கண்டு கும்பிடவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். நீ அந்தச் சமணர்களை அழித்து நமக்கு ஆலயஞ் செய்ய வேண்டும்" என்று அருளிச்செய்து, தாம் இருக்கின்ற இடத்தின் அடையாளங்களைத் தெரிவித்து, மறைந்தருளினார். அரசன் விழித்தெழுந்து ஆச்சரிய மடைந்து, மந்திரியாரோடும் விரைவிலே திருக்கோயிலிற் சென்று சுவாமி அருளிச்செய்த அடையாளத்தின் வழி கண்டு, சமணர்கள் செய்த வஞ்சனையை உணர்ந்து, அப்பமூர்த்தியை வணங்கி, அந்தச் சமணர்களை யானைகளாலே மிதிப்பித்துக் கொன்று, பரமசிவனுக்கு விமானஞ்செய்து, நிபந்தங்கள் அமைத்தான். அப்பமூர்த்தி உள்ளே புகுந்து, சுவாமியை தரிசித்து.
"தலையெல்லாம் பறிக்குஞ் சமண் கையரு
ணிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே
யலையினாற் பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே"
என்னுந் திருப்பதிகம் பாடி, சிலநாள் அங்கிருந்தார்.
பின் அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவானைக்கா, எறும்பியூர், திருச்சிராப்பள்ளி, கற்குடி, திருப்பராய்த்துறை, என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, திருப்பைஞ்ஞீலியை நோக்கிச் சென்றார். செல்லும் வழியிலே, பசியினாலும் தாகத்தினாலும் மிக வருந்தி இளைத்தார். இளைத்தும், சித்தமலையாமல் நடக்க பரமசிவன் அவருடைய வருத்தத்தை நீக்கும் பொருட்டு வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி, ஒரு பிராமண வடிவங்கொண்டு பொதிசோறு வைத்துக் கொண்டிருந்தார். திருநாவுக்கரசுநாயனார் தமக்குச் சமீபத்தில் வந்தவுடனே, ஐயர் அவரை நோக்கி "நீர் வழி நடந்து மிக இளைத்துப் போனீர். என்னிடத்திலே பொதி சோறு இருக்கின்றது. புசித்து இந்தக்குளத்திலே சலபானம் பண்ணி இளைப்பு நீக்கிக்கொண்டு போம்" என்று சொல்லி, பொதிசோற்றைக் கொடுத்தார், அப்பமூர்த்தி அதை வாங்கிப் புசித்துச் சலபானம் பண்ணிக்கொண்டு இளைப்பு நீங்கி இருந்தார். சுவாமி அவரை நோக்கி நீர் எங்கே போகின்றீர் என்று கேட்க; வாகீசர் "நான் திருப்பைஞ்ஞீலிக்குப் போகின்றேன்" என்று சொல்லிப்போனார். சிவபிரான் "நானும் அங்கேதான் போகின்றேன்" என்று சொல்லி, அவருடனே கூடிச்சென்று, திருப்பைஞ்ஞீலியைச் சமீபித்தவுடனே மறைந்தருளினார். அப்பமூர்த்தி அதுகண்டு திருவருளை வியந்து, கண்ணீர் பொழிந்தழுது விழுந்து நமஸ்கரித்து எழுந்து, ஆலயத்திற் சென்று சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடி, கைத்தொண்டு செய்து கொண்டிருந்தார். சில நாளாயின பின், அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவண்ணாமலைக்குச் சென்று சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, தொண்டைநாட்டை அடைந்து, திருவோத்தூரை வணங்கிக் கொண்டு, காஞ்சிபுரத்திற் சென்று, திருவேகம்பம், திருக்கச்சிமயானம், திருமேற்றளி, திருமாற்பேறு என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு, சிலநாள் அங்கிருந்தார். பின் அங்குநின்றும் புறப்பட்டு, திருக்கழுக்குன்று, திருவான்மியூர், திருமைலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு, திருக்காரிக்கரை என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, தென்கைலாசமாகிய திருக்காளத்திமலையை அடைந்தார். அங்கே பொன்முகலியிலே ஸ்நானஞ்செய்து கொண்டு, மலையின்மேல் ஏறி, சுவாமியை வணங்கித் திருப்பதிகம்பாடி, அவருடைய வலப்பக்கத்திலே நிற்கின்ற கண்ணப்பநாயனாருடைய திருவடிகளை வணங்கி, சிலநாள் அந்த ஸ்தலத்திலே வசித்தார்.
பின் உத்தரகைலாசத்திலே பரமசிவன் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசிக்க விரும்பி, திருக்காளத்தி மலையினின்று நீங்கி, உத்தரதிசையிலிருக்கின்ற திருப்பருப்பதத்தை அடைந்து வணங்கி, திருப்பதிகம் பாடிச்சென்று, காசியை வணங்கிக்கொண்டு அதற்கு அப்பால் இருக்கின்ற கற்சுரத்திலே சாகமூலபலங்கள் புசித்தலையும் ஒழிந்து, திருக்கைலாசதரிசனஞ் செய்யல் வேண்டுமென்னும் பேராசையால் இராப்பகல் விடாது நடந்தார். அதனால் அவருடைய பாதங்கள் பரடுவரைக்குந் தேய்ந்தன. தேய்ந்தும், ஆசை மேலீட்டினால் தம்முடைய இரண்டு கைகளையும் ஆதராவாகக் கொண்டு தாவிச்சென்றார். அந்தக் கைகளும் மணிக்கட்டு அசைந்து கரந்து சிதைந்தன. பின்னும் ஆசை சிறிதுங் குன்றுதலின்றி மேலிடுதலால் கொடிய நெருப்பையொத்த வெவ்விய பருக்கைக் கற்கள் பொருந்திய மார்க்கத்தில் மார்பினால் நகர்ந்து போயினார். மார்பும் தசை நைந்து சிந்த, எலும்புகளும் முறியலுற்றன. பின் புரண்டு புரண்டு போயினார். அதனால் தேகமுழுதும் அரைய, நாயனார் திருக்கைலாசகிரியினிடத்தே பதிந்த அன்பின் உறுதியினால் மெல்ல நகருதற்கு முயன்றும், கூடாமையால் வழியிலே கிடந்தார். அப்பொழுது பரமசிவன் அப்பமூர்த்தியை மீளவும் தமிழ்நாட்டிற் செலுத்தி அந்நாட்டிலுள்ளோர் உய்யும்பொருட்டுத் தமிழ்வேதமாகிய தேவாரம் பாடுவித்தற்கும், அவ்வப்பமூர்த்தியுடைய கருத்தையும் மாறின்றி முடித்தற்கும், திருவுளங்கொண்டு, அவ்விடத்தில் ஒரு தடாகத்தை உண்டாக்கி, ஒரு முனிவர் வடிவங்கொண்டு, அந்நாயனாருக்கு முன் வந்து நின்று, "நீர் அங்கங்கள் எல்லாம் அழிந்து போக வருத்தத்தோடும் இந்தக்கொடிய காட்டில் எதன் பொருட்டு வந்தீர்" என்று கேட்டார். அப்பமூர்த்தி மரவுரியாடையையும் யஞ்ஞோபவிதத்தையும் சடைமுடியையும் விபூதிதாரணத்தையுமுடைய அந்த முனிவரைக் கண்டபொழுதே பேசுதற்கு அற்பசத்தியுண்டாக, அவரை நோக்கி, "முனிவரே! நமது கடவுளாகிய பரமசிவன் உத்தரகைலாசத்திலே உமாதேவி சமேதராய் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசித்து வணங்கும் பொருட்டு விரும்பி வந்தேன்" என்றார். அதற்கு முனிவர் "தேவர்களாலும் அடையப்படுதற்கு அரிதாகிய திருக்கைலாசகிரி மனிதர்களால் அடையப்படுதற்கு எளிதா! நீர் இந்தக் கொடுஞ் சுரத்திலே வந்து என் செய்தீர்! இனித் திரும்பி விடுதலே உத்தமம்" என்றார். உடனே அப்பமூர்த்தி "திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவபெருமானுடைய திருக்கோலத்தைத் தரிசித்தன்றி அநித்தியமாகிய இந்த தேகத்தைக் கொண்டு திரும்பேன்" என்று மறுத்தார். சுவாமி அவருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி ஆகாயத்தில் அசரீரியாகி நின்று, "நாவுக்கரசனே எழுந்திரு" என்றார். உடனே அப்பமூர்த்தி அழிந்த உறுப்புகளெல்லாம் முன்போல நிரம்பப் பெற்றுச் சிறந்த திருமேனியோடும் எழுந்து, "சுவாமி! தேவரீர் திருக்கைலாசகிரியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோலத்தை அடியேன் தரிசித்து வணங்கும் பொருட்டு அருள் செய்யும்" என்று பிரார்த்தித்து நமஸ்காரம் பண்ணினார். அப்பொழுது பரமசிவன் "நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றை அடைந்து, நம்மைக் கைலாசகிரியில் வீற்றிருந்தபடி அந்த ஸ்தலத்திலே தரிசித்து வணங்கு" என்று பணித்தருளினார்.
அப்பமூர்த்தி அப்பணியைச் சிரமேற்கொண்டு, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதி, தடாகத்திலே முழுகி, திருவையாற்றிலிருக்கின்ற ஓர் வாவியின் மேலே தோன்றிக் கரையிலேறி, வழியிலே அந்தத் திருப்பதியிலுள்ள சராசரங்கள் தங்கள் தங்கள் துணையோடும் பொலிதலைக் கண்டு, அவைகளைச் சிவமும் சக்தியுமாகப் பார்த்து வணங்கிக் கொண்டு, ஆலயத்துக்கு முன்னே சென்றார். அவ்வாலயம் திருக்கைலாசகிரியாக, அதனிடத்தே வேதங்களும் சிவாகமங்களும் இருபக்கத்திலும் வாழ்த்தவும், தும்புரு நாரதரென்னும் இருவரும் யாழ் வாசிக்கவும், பிரம விஷ்ணுக்களிருவரும் வஸ்திரத்தை ஒதுக்கி வாயைக் கையினாலே பொத்திக் கொண்டு ஒதுங்கி நின்று தத்தங்குறைகளைச் சொல்லவும், பூதகணங்கள் கடைதோறும் காக்கவும், தேவர் சித்தர் அசுரர் சாரணர் காந்தருவர் கின்னரர் இயக்கர் விஞ்சையர் முதலாகிய கணத்தவர்கள் துதிக்கவும், திருநந்தி தேவர் கையிலே பிரம்பைத் தரித்துக்கொண்டு பணிசெய்யவும், காருண்ணிய ஸ்வரூபியாகிய சிவபெருமான் ஒரு திவ்வியாசனத்தின் மேலே அநந்தகோடி சூரியபிரகாசத்தோடும் பார்வதி சமேதராய் வீற்றிருந்தருளினார். அப்படியிருத்தலை அப்பமூர்த்தி கண்ட மாத்திரத்திலே விழுந்து நமஸ்கரித்து; உரைதடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, ஆனந்தவருவி சொரிய, கரையிறந்த அருட் பெருங் கடலிலே அன்புநதி ஈர்த்துச் செல்ல, மிதந்து போய், தெவிட்டுதலில்லாத அளவிறந்த சிவானந்தாமிர்தத்தைப் பருகி, சந்நிதானத்திலே ஆனந்தக்கூத்தாடித் திருத்தாண்டகங்கள் பாடினார். திருக்கைலாச பதியாகிய கடவுள் தம்முடைய திருக்கோலத்தை இப்படி அப்பமூர்த்திக்குத் தரிசிப்பித்து, பின் மறைந்தருள; அவ்வப்பமூர்த்தி மனம் வருந்தி, பின் ஒருவாறு தெளிந்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு அந்தத்திருப்பதியில் இருந்தார்.
சிலநாட் சென்றபின், திருவையாற்றினின்றும் நீங்கி நெய்த்தானம், மழபாடி முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, திருப்பூந்துருத்தியை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அங்கே ஒரு திருமடங்கட்டுவித்து, பல்வகைத் தாண்டகம் தனித்திருத்தாண்டகம், அடைவுதிருத்தாண்டகம், திருவங்கமாலை முதலிய திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். இருக்கும் பொழுது, பாண்டிநாட்டிற் சென்று சமணர்களை வாதில் வென்று சைவ ஸ்தாபனம் பண்ணிப் பாண்டியராஜனுடைய கூனை நிமிர்த்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அந்நாட்டினின்று நீங்கி, சோழ மண்டலத்தை அடைந்து, அப்பமூர்த்தி திருப்பூந்துருத்தியிலிருந்தலைக் கேள்வியுற்று, அதற்குச் சமீபத்திலே வந்தருளினார். அதை அப்பமூர்த்தி அறிந்து மனமகிழ்ந்து, அவரை எதிர்கொண்டு வணங்கும்படி சென்று, அவர் வரும் எல்லையை அடைந்து, திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டு அவரைத் தரிசிக்கும்படி சூழ்ந்த அடியார்களுடைய நெருக்கத்தினாலே தம்மை ஒருவரும் இன்னாரென்று அறியாதபடி உட்புகுந்து, அவர் ஏறிவரும் முத்துச்சிவிகையைத் தாங்குகின்றவர்களோடு தாமும் ஒருவராய்த் தாங்கிக் கொண்டு வந்தார். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருப்பூந்துருத்திக்கு மிகச் சமீபித்தவுடனே, அப்பர் எங்குற்றார்" என்று வினாவ; அதைக் கேட்ட அப்பமூர்த்தி "அடியேன் தேவரீரைத் தாங்கிவரும் பெருவாழ்வைப் பெற்று இங்குற்றேன்" என்றார். உடனே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அதிசீக்கிரஞ் சிவிகையினின்றும் இறங்கி, மனப்பதைப்போடு அப்பமூர்த்தியை வணங்க; இவரும், தம்மை அவர் வணங்குதற்கு முன் தாம் அவரை வணங்க; அதுகண்ட அடியார்களெல்லாரும் வணங்கி, ஆனந்தகோஷஞ் செய்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வாகீசரோடும் திருப்பூந்துருத்தியிற் சென்று, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் பாண்டி நாட்டிற் சென்று, சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனுடைய கூனை நிமிர்த்ததையும், அந்நாடெங்கும் விபூதியை வளர்த்ததையும், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியார் மந்திரியாராகிய குலச்சிறை நாயனார் என்கின்ற இருவருடைய பெருமையையும், வாகீசருக்குச் சொல்லியருளினார். வாகீசர் தாம்தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள சிவஸ்தலங்களை வணங்கியதைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சொல்லியருளினார்.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் தொண்டை நாட்டுக்கு யாத்திரை செய்ய விரும்பித் திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட வாகீசர் பாண்டிநாட்டுக்கு யாத்திரை செய்ய விரும்பிப் புறப்பட்டு, அப்பாண்டி நாட்டை அடைந்து, திருப்புத்தூரை வணங்கிக் கொண்டு, மதுரையிற்சென்று சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, பாண்டிமாதேவியாரும் கூனிமிர்ந்த பாண்டியரும் குலச்சிறை நாயனாரும் வணங்கித் துதிக்கச் சிலநாள் அங்கிருந்தார். பின் மதுரையை நீங்கி, திருப்பூவணம், இராமேச்சரம், திருநெல்வேலி, திருக்கானப்பேர் முதலாகிய ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு, சோழமண்டலத்துக்குத் திரும்பி வந்து, திருப்புகலூரை அடைந்தார்.
திருப்புகலூரிலே தினந்தோரும் சுவாமி தரிசானம் பண்ணி திருமுன்றிலிலே கைத்தொண்டு செய்து கொண்டிருந்தார். இருக்கு நாட்களிலே, நின்ற திருத்தாண்டகம், தனித்திருத் தாண்டகம், க்ஷேத்திரக்கோவை, குறைந்ததிருநேரிசை, தனித்திரு நேரிசை, நினைந்ததிருநேரிசை, ஆருயிர்த்திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசப் பதிகம், சரக்கறைத் திருவிருத்தம், முதலிய திருப்பதிகங்களைப் பாடினார். பரமசிவன் அந்நாயனாருடைய வைராக்கியத்தை யாவருக்கும் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, அவர் திருமுன்றிலே கைத்தொண்டு செய்யும்பொழுது உழவாரம் நுழைந்தவிடங்கெளெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் பிரகாசித்துக் கிடக்கும்படி அருள்செய்தார். நாயனார் அவைகளைக் கண்டு அவைகளை அங்கே கிடக்கின்ற பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி உழவாரத்தில் ஏந்திக் குளத்திலே விழ எறிந்துவிட்டார்.
பின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்" என்னுங்கருத்தால், "பொய் மாயப்பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார். அரம்பையர்கள் தங்கள் கருத்து முற்றாமையால், அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த நிலைமையை சமஸ்தலோகத்தார்களும் அறிந்து துதிக்கலுற்றார்கள்.
வாகீசர், "புகலூரா என்னை இனிச்சேவடிக் கீழிருத்திடும்" என்று எழுகின்ற ஞானத்தினால் திருவிருத்தங்கள் பலவற்றைப் பாடி, ஒரு சித்திரை மாசத்திலே சதய நக்ஷத்திரத்திலே "எண்ணுகே னென்சொல்லி யெண்ணுகேனோ" என்று திருத்தாண்டக மெடுத்துத் திருப்பாட்டிறுதிதோறும்"உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று பாடி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
திருநாவுக்கரசுநாயனார் புராண சூசனம்
1.கற்பு நிலை வழுவாது சிவனை வழிபடல்
கற்பாவது நாயகனிற் சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை வழிபடும் முறைமை இது எனவும் தந்தை தாயரும், பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இப்படி என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம். ஆதலால், சுமங்கலிக்கு, தன் கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் செய்தலே மேலாகிய தருமமாம். ஏவல் செய்து வரும் பொழுது, பரமபதியாகிய சிவனை வழிபடல் வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், தனக்கெனச் சுதந்தரம் இல்லாமையால், கணவனது அனுமதியைப் பெற்று, ஆசாரியரை அடைந்து சிவதீக்ஷை பெற்று, கணவனுக்குச் செயற்பாலதாகிய ஏவலின் வழுவாது நின்றே சிவனை விதிப்படி வழிபடுக. கணவன் இறந்துவிடில், ஆபரணங்கள் அணியா தொழிதலும், வெற்றிலை பாக்கை ஒழித்தலும், ஒரு பொழுது பகலிலே உண்டலும், பாயல் வேண்டாது தரையிலே நித்திரை செய்தலும், ஐம்புலன்களை அடக்கலும், சிவ புண்ணியங்களை விதிவழுவாது செய்தலும் வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம். "ஏந்திசைக்குப் பதியேவ லியற்றுதலே நியதி யீசனிணைத் தாளணைய வேசறவு பெருகிற் - காந்தனனு மதிபெற்றுக் கைக்கொள்க பூசை கலித்திடினே யிருதுகலுழ்ந்தொரு மூன்று நாளும் - வாய்ந்திடச் செய் துடற்சுத்தி மற்றையர்நீர் தரவே மானதபூ சனைபுரிக மற்றையநாட் புனலுட் - டோய்ந் தருந்திக் கவ்வியத்தைச் சூட்டுகபோ தரற்குக் சூதகமுன் பெரு நோய்முன் சூட்டுவிக்க பிறரால்" எ-ம்: வாயுசங்கிதை, "கருநெறிக் கூந்தலார்க்குக் கணவரை வணங்க றானே - யுரியநற் றரும மாகுமொண்டிறற் கணவர் சொல்லாற் - பருவரை பயந்த நங்காய் பணிந்துநம் - பாதம் போற்றிப் - புரியவிழ் மலர்கடூவிப் பூசனை புரிதலாமால். கணவர்தமேவல் பூண்டு கற்பினி லொழுகிடா தார் - நணுகருங் கொடிய வெய்ய நரகினு ளழுந்து வாராற் - பணிவுறு கணவர் தம்மை யிகழ்ந்துநற் பான்மை யின்றி - யணிகலன் றுறந்த மாதர் தன்மையை யறைகுவாமே. தரையினிற் கிடத்த றான நல்கிட றயங்கு நீரி - லரியவெண் ணீற்றின் மூழ்க லன்பொடு நமைப்பூ சித்த - லொருபக லுண்டு வைக லட்டமி பதினான்கோடு - மருவுபூ ரணையி லுண்டி யொழிந்திடல் வழக்க தாமே" எ-ம்.: காசிகாண்டம், "மருவுகாதலன் மாய்ந்திடின் மங்கைய - ரொருப கற்பொழு துண்டரும் பாகிலை - விரியும் பாயல் வெறுத்துமண் மேற்றுஞ்சி - யரிய நோன்புக ளாற்றிட வேண்டுமால், சுடர்செய் பொற்கல னீத்திடுந் தோகையர் - கடவுள் பூசனை காதலி னாற்றியு - முடல மாசுண வுள்ளுயிர் நீத்திடா - தடகு மூல மருந்திட வேண்டுமால்" எ-ம். வரும்.
இப்புராணத்திலே சுட்டப்பட்ட திலகவதியார், தம்மைக் கலிப்பகையார் விவாகம் செய்திலர் ஆயினும், அவர் இறந்தமை கேட்டவுடனே, 'என்னுடைய தந்தை தாயர்கள் என்னை அவருக்கு மணம் செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால், இவ்வுயிர் அவருக்கே உரியது; ஆதலால், இவ்வுயிரை அவருயிரோ டிசைவிப்பேன்' என்று சாவத்துணிந்தமையாலும், தம்பியாராகிய மருணீக்கியார் பொருட்டு அக்கருத்தை ஒழித்து உயிர்தாங்கிய பின்னும், இளமைப்பருவத்தராய் இருந்தும் விவாகம் செய்து கொள்ளாமல், தமது வீட்டிற்றானே தவஞ்செய்து கொண்டிருந்து, பின்னர்த் திருவதிகை வீரட்டானத்திற் சென்று, சிவ சின்னங்களைத் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே திருவலகிடுதல் திருமெழுக்கிடுதல் பூக்கள் கொய்து திருமாலைகள் தொடுத்தல் முதலிய திருப்பணிகள் பலவற்றை நாடோறும் விதிவழுவாது சிவன்மாட்டுள்ள மெய்யன்போடு செய்தமையாலும், இவரது கற்பின் பெருமையும் ஐம்புலன்களை அடக்கி நின்ற அருமையும் சிவபத்தி முதிர்ச்சியும் செவ்விதிற் றெளியப்படும். இவர் இத்திருப்பணிகளை மெய்யன்போடு செய்தனர் என்பது, இவர் புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்த தமது தம்பியாராகிய மருணீக்கியாரை அதில் நின்றும் தூக்கி ஆளும்பொருட்டுச் செய்த வேண்டுகோளுக்கு இசைந்து, கருணாநிதியாகிய சிவன் அவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டருளினமையாலே துணியப்படும்.
2. சிவனது திருவருள் இல்வழி உண்மைநெறி கூடாதெனல்
உலகத்திலே, சமயங்களும், அந்த அந்தச் சமய சாத்திரங்களும் அந்தச் சாத்திரங்களிலே சொல்லப்படும் பொருள்களும், ஒன்றொடொன்று ஒவ்வாது பலதிறத்தனவாய் இருக்கும். இவைகள் எல்லாவற்றுள்ளும், மேலாகிய சமயம் யாது? சாத்திரம் யாது? பொருள் யாது? எனில், இச்சமயப் பொருள்கள் எல்லாம், இது ஆகும் அது அன்று என்னும் பிணக்கு இன்றி, தன்னிடத்தே காண நிற்பது எந்தச் சமயமோ அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரமே சாத்திரம்; அந்தச் சாத்திரத்திற் சொல்லப்படும் பொருளே பொருள். இப்படி எல்லாச் சமயப் பொருள்களையும் தன்னிடத்து அடக்கி நிற்கும் சற்சமயம் சைவ சித்தாந்தமேயாம். ஆதலால், அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரங்களாகிய வேத சிவாகமங்களே சாத்திரம்; அந்தச் சாத்திரங்களிற் சொல்லப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களுமே மெய்ப்பொருள்கள். அது "ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்க ளொன்றோ டொன்றொவ்வாம லுளபலவு மிவற்றுள் - யாதுசமயம் பொருணூல் யாதிங் கென்னி லிதுவாகு மதுவல்ல வெனும் பிணக்க தின்றி - நீதியினா லிவையெல்லா மோரிடத்தே காண நிற்பதியா தொரு சமய மதுசமயம் பொருணூ - லாதலினா லிவையெல்லா மருமறையா கமத்தே யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க.
சமய சாத்திரங்கள் எல்லாம் வேதாகமங்களிலே சுருக்கிக் கூறப்பட்டிருக்கும். அவைகளைச் சமுத்திரகலச நியாயமாக உருத்திரர்களும் தேவர்களும் இருடிகளும் தத்தம் அறிவளவாகத் தனித்தனி விரித்து உட்சமய புறச் சமய சாத்திரங்களாகப் பண்ணினார்கள். ஒன்றோடொன் றொவ்வாத சாருவாகம் முதலிய பல சமயப் பொருள்களை வேதாகமங்களில் சிவன் கூறுதல் என்னை ஏனின், ஆன்மாக்களது அதிகார பேதம் பற்றி என்க. முன்னர் அதிதாமதர்களாய், மந்த மதிகளாய், லெளகிக சுகத்தையே பரமபுருஷார்த்தம் எனவும், புறமாகிய புத்திராதிகளையே ஆன்மா எனவும் அபிமானிக்கும் அதிகாரிகளைக் குறித்து, துக்கம் முதலியவற்றோடு உடன் விரவி இருத்தலால் லெளகிக சுகம் பரம புருஷார்த்தம் அன்று எனவும், புத்திராதிகள் ஆன்மா அல்ல எனவும் உணர்த்தி, அவர்களுக்குப் புத்தி ஸ்திரமாதற் பொருட்டு நுண்பொருள் உணரும் வன்மை இன்மையால், தூலதேகத்தையே ஆன்மா என்றும் அதனழிவையே பரம புருஷார்த்தம் என்றும் உபதேசிக்கின்றனர். பின்னர், அதிற்கூறிய தருமானுட்டானத்தினாலே சிறிது பிரசாதம் பெற்றுச் சற்றே சித்த சுத்தி அடைந்து தேகான்மா முதலியவற்றில் பச்சாத்தாபம் உதிக்கப்பெற்ற அதிகாரிகளைக் குறித்து, தேகாதிகளில் ஏற்றிய ஆன்மத்தன்மையை மறுத்தற்குப் புத்த சாத்திரம் உபதேசிக்கின்றனர். இவ்வாறே மேலும் சோபானக்கிரமமாக உபதேசித்தலால், விரோதம் இன்மை தெளிக. முன்முன் உள்ள சமயங்கள் பின்பின் உள்ள சமயங்களால் வாதிக்கப்படும். வாதிக்கப்படுவது பூருவபக்ஷமும், வாதிப்பது சித்தாந்தமுமாம். சைவ சித்தாந்தம் மற்ற எச்சமயங்களையும் பூருவபக்ஷம் பண்ணி நிற்றலானும், அதனைப் பூருவபக்ஷம் பண்ணுதற்கு ஒரு சமயமும் இன்மையானும், அதுவே சித்தாந்தம் எனப்படும். "சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்" என்று இரத்தினத்திரயத்திற் கூறப்பட்டது.
இச்சைவசித்தாந்த நூல்களை, பசுக்களாகிய நாம் பரதந்திரர்களாதலால் ஒன்றனை உள்ளவாறு உணர்தலும், அதன் வழி நிற்றலும் இயலாவாம் எனத் தெளிந்து, சுவதந்திரராகிய சிவனை மறவாது அவரது திருவருளையே முன்னிட்டு நின்று, விதிப்படி கற்றுணர்தல் வேண்டும். இவ்வாறே திருவருளை முன்னிடாது எத்துணை நூல்களைக் கற்பினும், எத்துணைத் தருமங்களைச் செய்யினும், சைவ சித்தாந்தமே உண்மைநெறி என்று ஐயந்திரிபறத் துணிதலும், அந்நெறியின் வழுவாது நிற்றலும் கூடாவாம். திருவருளே கண்ணாகக் காண்டல் வேண்டும் என்பதும், அஃது இல்வழி உண்மை நெறியை உணர்ந்து சிவனை அடைதல் கூடாது என்பதும், "உயிரா வணமிருந் துற்றுநோக்கி யுள்ளக்கிழியி னுருவெழுதி - யுயிரா வணஞ் செய்திட் டுன்கைத் தந்தா லுணரப் படுவாரோ டொட்டி வாழ்தி - யயிரா வணமேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூராண்ட - வயிரா வணமேயென் னம்மா னேநின் னருட் கண்ணா னோக்காதா ரல்லாதாரே." - ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே யடங்குவித்தா லாரொருவ ரடங்காதாரே - யோட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே - பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே பணிவித்தா லாரொருவர் பணியாதாரே - காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்னும் தேவாரங்களானும், "அவனருளாலே யவன்றாள் வணங்கி" என்னும் திருவாசகத்தானும் உணர்க.
இம்மருணீக்கியார், யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து பல தருமங்களைச் செய்தும், பிரபஞ்ச வாழ்வினது அநித்தியத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தும், சைவ நூல்களை ஓதி உணர்ந்தும், எவ்வுயிர்க்கும் முதல்வராகிய சிவனது திருவருள் இன்மையாலன்றோ! சமணர்களது துர்ப் போதனையினாலே மயங்கி, அவர்களது ஆருகத சமயமே உண்மை நெறி என்று துணிந்து, அதிலே பிரவேசித்தார். சிவனன்றி முதல் இல்லை என்பது "சிவமுதலே யன்றி முதலில்லை யென்றுஞ் - சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன - தென்செயல தாகின்ற தென்று மிவை யிற்றைத் - தன்செயலாக் கொள்ளாமை தான்" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானுங் காண்க. இவர் சைவ நூல்களை ஓதி உணர்ந்தும் சிவனது திருவருள் இன்மையால் சைவமே உண்மைநெறி என்னும் உணர்ச்சி இவருக்குப் பிறந்திலது என்பது, இங்கே "நில்லாத வுலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை - யல்லேனென் றறத் துறந்து சமயங்க ளானவற்றி - னல்லாறு தெரிந்துணர்ந்து நம்பரரு ளாமையினாற் - கொல்லாமை மறைந்துறையு மமண்சமயங் குறுகுவார்" என்னும் திருவிருத்தத்தால் உணர்த்தப்பட்டது. இத் திருவருள் தன்னைப் பெறல் வேண்டும் என்னும் ஆசையோடு பெருந்தவம் செய்த வழி யன்றிக் கிடையாது. இந்நாயனார் சிவனை அடைதற் பொருட்டு முற்பிறப்பிலே பெருந்தவம் செய்தாராயினும், அத்தவத்திலே சிறிது வழுவுற்றமையாலன்றோ, இப்பிறப்பிலே நெடுநாள் பெய்நெறியாகிய பரமதத்தை அனுட்டித்தனர். கருணாநிதியாகிய சிவன் அச்சிறுகுற்றத்தின் பொருட்டு. இவரை இப்பிறப்பிலே தண்டித்தும், பின்னர் இவர் முன் செய்த தவத்தினாலன்றோ, இவரைக் கை விடாது வலிந்தாட்கொள்ளத் திருவுளங்கொண்டு, சூலை நோயினால் வருத்தி, உண்மை நெறியாகிய தமது சைவ சமயத்திலே புகும்படி, திருவருள் சுரந்தனர். சிவபுண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒரோவழித் தீது செய்யினும், அவர்களைக் கைவிடாது காக்கும் பெருங் கருணையினர் சிவனே என்பது, இதனாலே துணியப்படும். "இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ் - சென்று தொடருமவன் சென்றிடத்தே - யென்றுந்தான் - றீதொருவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ - மாதொருகூ றல்லனோ மற்று" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் காண்க. புறச்சமயங்கள் பொய்ந்நெறிகள் என்பது "இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை - நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் - தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு - மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன" எனத் திருவாசகத்தினும், "சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குநின் - றாவி யறாதேயென் றுந்தீ பற - வவ்வுரை கேளாதே யுந்தீபற" எனத் திருவுந்தியாரினும் கூறுமாற்றால் அறிக. சிவன் இவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டமையால், அவர் ஆன்மாக்களைத் தண்டிப்பதெல்லாம் அவர்கள் குற்றத்தினின்றும் நீங்கித் தம்மை அடைந்து பேரின்பம் பெற்று உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலே யாம் என்பது தெளியப்படும். அது "தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ லாற்றின் - வந்திடா விடினுறுக்கி வளாரினா லடித்துத் தீய - பந்தமு மிடுவரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகு - மிந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தானும் உணர்க.
3. சீவன் முத்தி நிலை
ஆன்மாவுக்கு ஆணவ மல பரிபாகத்தினாலே தீவிரதர சத்திநிபாதம் உண்டானபோது, கருணாநிதியாகிய சிவன், தமது திருவருளினாலே சிவஞானத்தை உதிப்பித்து, சிவானந்தம் அனுபவிப்பித்து, மேல்வரும் பிறப்புக்கு ஏதுவாகிய சஞ்சித ஆகாமியங்களைக் கெடுத்து எடுத்த சரிரத்திலே பிராரத்துவம் புசிக்கும்படி சீவன் முத்தனாக வைத்து, தேகாந்தத்திலே பரமுத்தியைக் கொடுத்தருளுவார். அது "சித்தாந்த தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றிலே சீவன் முத்த ராக - வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும் பிறப்பை யறுத்து - முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவு முகலரெல்லா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங் குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க. சத்திநிபாதமாவது திரோதான சத்தி நீங்க அனுக்கிரக சத்தி பதிதலாம். இத்திருநாவுக்கரசு நாயனார் தீவிரதர சத்திநிபாதமுடையராய், சிவனது திருவருளினாலே மலவிருள் நீங்கிச் சிவத்துவம் விளங்கப் பெற்று, சிவானந்தம் மேலிட்டு, சீவன் முத்தராய் இருந்தார். சிவானந்த விளக்கத்துக்கு அடையாளம் ஆனந்த அருவியும், புளகமும், விம்மலும், தழுதழுத்தலும், பரவசமும் இடையறாது எழும் அத்தியற்புத சின்மயமாகிய பாடலுமாம். இந்நாயனார் தமது தமக்கையாராலே விபூதி அணியப் பெற்று சிவசந்நிதியை அடைந்தவுடனே, சிவனது திருவருளினாலே மலநீக்கமும், சிவத்துவ விளக்கமும் இவருக்கு உண்டாயின என்பதும், சிவானந்தம் வெளிப்பட விளங்கியது என்பதும், இங்கே "நீறணிந்தா ரகத்திருளும்" என்பது முதல் "அங்கங்களடங்க" என்பது இறுதியாய் உள்ள ஐந்து திருவிருத்தங்களால் உணர்த்தப்பட்டன. சிவானந்தம் வெளிப்பட விளங்கினமை, இன்னும் இப்புராணத்திற் பல விடங்களில் விரித்துக் கூறியவாற்றால் உணர்க. இவரது சிவானந்த விளக்கம், இவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களினாலே மெய்யுணர்வு உடையோர்க்கு, தெள்ளிதின் விளங்கும்.
சீவன் முத்தராவார் அளத்திற்பட்ட புற்போலச் சிவப்பிரகாசத்தினாலே போக சாதனமாயுள்ள உட்கரணங்களும் புறக்கரணங்களும் ஆகிய பசு கரணங்கள் எல்லாம் சிவகரணமாய் நிகழப் பெற்று, சகல கருவிகளோடும் கூடியிருக்கும் சாக்கிராவத்தையிலே நிருமல துரியாதீதத்தைப் பொருந்தினோர்களாய், பூமியின்கணுள்ள ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டுச் சஞ்சரிக்கும் இயல்புடையோராம், அது "இந்நிலைதா னில்லையே லெல்லா மீச னிடத்தினினு மீசனெல்லா விடத்தினினு நின்ற - வந்நிலையை யறிந்தந்தக் கரணங்க ளடக்கி யறிவதொரு குறிகுருவி னருளினா லறிந்து - மன்னுசிவன் றனையடைந்து நின்றவன்ற னாலே மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத் - துன்னியசாக்கிரமதனிற் றுரியா தீதந் தோன்றமுயல் சிவானுபவஞ் சிவானுபூ திகமாம்". "சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்களுலகிற் சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்களிவர்கள் - பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ - வாக்குமுடி கவித்தரசாண் டவர்களரி வையரோ டனுபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர் - நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு நுழைவர் பிறப் பினில்வினைகணுங்கிடாவே" என்னுஞ் சிவஞானசித்தித் திருவித்தங்களானும், "காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் - பேணு மடியார் பிறப்பகலக் - காணும் - பெரியானை நெஞ்சே பெருந்துறையி லென்றும் - பிரியானை வாயாரப் பேசு" என்னும் திருவாசகத்தானும் உணர்க. இத்திருநாவுக்கரசு நாயனாரும் அவ்வியல்பினையுடையரே. ஆதலால், இவர் அருளிச் செய்த தமிழ்வேதமாகிய தேவாரம் சிவவாக்கியம் என்றே ஐயந்திரிபறத் துணியப்படும். இவ்வாறன்றி, பசுவாக்கியம் என்று நினைப்பினும், அந்நினைவு அதிபாதகமாகிய சிவத்துரோகமாகி, எரிவாய் நரகம் பயந்தே விடும். இவர் வாக்கியம் சிவவாக்கியம் என்றே துணிந்து, சருவான்மாக்களும் அதனை ஓதி உணர்ந்து முத்தி பெற்றுய்தற் பொருட்டன்றோ, கிருபா சமுத்தரமாகிய சிவன், யாவரும் கேட்ப, இவருக்கு நாவுக்கரசு என்ப பெயர் கொடுத்தருளினார்.
சிவஞானிகள் சரியை முதலியன செய்யவேண்டுவதின்றன்றோ, அங்ஙனமாக, இத்திருநாவுக்கரசு நாயனார் சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சிவனைத் தரிசித்து வலம் வந்து வணங்கித் துதித்தல்களும், திருக்கோயிற் பிராகாரங்களினும் திருவீதிகளினும் புற்செதுக்குதலும் (திருகோயிற் பிராகாரங்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல்லைச் செதுக்குதல் சிவபுண்ணியம் என்பது 'சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக் கிடுதல் - புனன்மு கந்தெமை யாட்டுவித் தெமக்கெனப் புரித - றின்னு மாலயத் தகவையி னெழுந்தபுற் சீத்த - னனைந றுந்துணர் நாண்மல ரெடுத்துட னல்கல்" என்னும் உபதேச காண்டச் செய்யுளானும் அறிக.), பிறவும் செய்தமை என்னையெனின்; இவர் பசுத்துவம் நீங்கித் தஞ்செயலற்றுச் சிவனேயாய் நின்றமையால், இவை எல்லாம் இவர் செயலாகாது சிவன் செயலேயாய் நிகழ்ந்தன என்க. அது "நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன் - றன்செய றானேயென் றுந்தீ பற - தன்னையே தந்தானென் றுந்தீ பற" என்னும் திருவுந்தியாரானும் உணர்க. இங்ஙனம் இவையெல்லாம் சிவன்செயலாய் நிகழ்தல் எற்றுக்கெனின், ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை உய்வித்தற் பொருட்டென்க. அது சிவன் தக்ஷிணாமூர்த்தியாய், திருக்கையிற் செபமாலை கொண்டு செபம் பண்ணுதல் உயிர்களுக்கு உய்யுநெறி காட்டுதற் பொருட்டாதல் போலும் என்க. இந்நாயனார் செயலெல்லாம் உயிர்கள் பொருட்டே நிகழ்ந்தன என்பது, "அன்ன தன்மையர் கயிலையை யணைவதற் கருளார் - மன்னு தீந்தமிழ் புவியின் மேற் பின்னையும் வழுத்த - நன்னெ டும்புனற் றடமு மொன் றுடன்கொடு நடந்தார் - பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்" என இங்கும் குறிப்பிக்கப் பட்டமை காண்க. சிவஞானிகள் சரியை கிரியை முதலியவற்றைத் தாங்களாகவே வேண்டா என்று விடுவதும் இல்லை; செய்து வரல்வேண்டும் என்று சங்கற்பித்துச் செய்வதும் இல்லை; நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவரறியாது தானே போதல் போல, சிவஞானிகளுக்குச் சரியை கிரியை முதலியன வெல்லாம் தாமே நீங்கும். இவ்வாறன்றி, தாங்களே இவற்றைச் செய்யாதொழிந்தோர் நரகத்து வீழ்வர். அது "குறிப்பிடங் காலந்திக்கா சனங்கொள்கை குலங் குணஞ்சீர் - சிறப்புறு விரதஞ் சீலந் தவஞ்செபந் தியான மெல்லா - மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி - யுறக்குறு பவர் போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே" எனச் சிவப்பிரகாசத்தினும், "ஞாலநீதியு நான்மறை நீதியும் - பாலருன் மத்தர் பிசாசரி லெனவு - முறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந் - தானே தவிரா தானாற் புரியா - தொழிந்திடி னிரயத் தழுந்துத றிடமே" எனச் சங்கற்ப நிராகரணத்தினும் கூறுமாற்றாற் தெளிக.
இந்நாயனார் இவ்வுண்மை நிலையைப் பொருந்திய பெருந்தகைமையினர் என்பது, சமணர்கள் இவரை மிக்க சூட்டினை உடைய நீற்றறையில் ஏழுநாள் இருத்தியும், நஞ்சு கலந்த பாலும் அன்னமும் உண்பித்தும், இவரைக் கொல்லும் பொருட்டு யானையை ஏவியும், இவரைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலிலே தள்ளியும், அவைகள் சிறிதாயினும் இவரை வாதிக்காமையானும், தமது வேண்டுகோளின்படி சிவனது திருவருளினாலே தமது தோளிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டமையானும், அப்பூதியடிகணாயனாரது புத்திரர் விஷத்தினால் இறந்தபோது அவரை உயிர்ப்பித்தமையானும், திருவீழிமிழலையிலே சிவனடியார்களை அமுது செய்வித்தற் பொருட்டுச் சிவனிடத்தே படிக்காசு பெற்றமையானும், வேதாரணியத்திலே வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினமையானும், திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியிலே சிவனிடத்தே பொதிசோறு பெற்றமையானும், திருவையாற்றிலே கைலாசந் தரிசித் தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இவை எல்லாம் இவ்வுண்மை நிலையில்லாதாரால் இயலா என்பது "துரியங்கடந்தசுடர்த் தோகையுட னென்றும் - பிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச் - சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யுந் தன்மைகளு - மாக்கிடும்வந் தன்பர்க் கவன்", "கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலைதவிர்த்தல் - கல்லே மிதப்பாக் கடனீந்த - னல்ல - மருவார் மறைக்காட்டில் வாயிறிறப் பித்த - றிருவாமு ராளி செயல்" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இன்னும் இவர் சிவனது ஆஞ்ஞையினாலே தமது உழவாரம் நுழைந்த இடங்களெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் கிடக்கக் கண்டும், அவைகளைப் பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி, உழவாரத்த்ல் ஏந்திக் குளத்தில் விழ எறிந்து விட்டமையானும், அரம்பையர்கள் தம்முன் நின்று தம்மை மோகிப்பிக்கும் பொருட்டுப் பல முயற்சிகள் செய்தும், தமது சித்தநிலை சிறிதும் வேறுபடாது தாம் செய்யும் திருப்பணியிலேயே உறுதிகொண்டு நின்றமையானும், இவரது பெருமை தெளியப்படும். இவ்வருமை "ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்", "ஏந்திழையார் தஞ்சயனத் தெய்தித்தம் மெய்தொடினுங் - காய்ந் துவர்த்த லேதுறவு காண்" என்னும் திருவாக்குகளால் அறிக. இவர் பரமுத்தி பெற்றமை இங்கே, "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே னெனப்புகன்று - நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி யண்ணலார் சேவடிக்கீழாண்ட வர செய்தினார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.
இதுகாறும் கூறியவாற்றால், இந்நாயனார், ஆன்மாக்கள் புறச்சமயப் படுகுழியில் வீழாது சைவமே சற்சமயம் என்று தெளிந்து, அதன்வழி நின்று சிவனை வழிபட்டு உய்யும் பொருட்டு, தமது செயல்களாலும், திருவாக்குகளானும், மெய்யறிவுச் சுடர் கொளுத்திய சமயகுரவராயினார் என்பது, தெள்ளிதிற் பெறப்படும். ஆதலால் பரசமயங்களிற் புகாது சிவனே பரமபதி எனத் துணிந்து, இந்நாயனார் காட்டியவாறே விபூதி உருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்கள் தரித்து, சிவனை இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் மெய்யன்பினோடு மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் வழிபட்டு உய்தலே நாம் அருமையாகப் பெற்ற இச்சரீரத்தினால் பெறப்படும் பயன் என்பது கருங்கன் மனமும் கரைந்துருகச் செய்யும் பெருஞ்சிறப்பினதாகியும், காமுகருக்கு இளம் பெண்களுடைய வசனம் போலச் சிவனுக்குப் பிரீதியைச் செய்யும் இயல்பினதாகியும் விளங்கும் இந்நாயனாரது தேவாரத்தைச் சித்தசமாதானத் தோடும் மெய்யன்போடும் விதிப்படி ஓதி உணர்க.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment